கொவிட் - 19 கொரோனா வைரஸ் மிருகத்திலிருந்து மனிதனுக்குப் பரவியதாக முதன்முதலில் அறிவித்த நாடான சீனாவினால், அந்த வைரஸைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடியதாக இருந்திருக்கிறதென்பது மார்ச் மாதப்பிற்பகுதியில் தெளிவாகத் தெரியவந்தது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக - மக்களைத் தனிமைப்படுத்துவது தொடக்கம் கண்காணிப்பது வரை - தனது கைவசமிருந்த சகல ஆயுதங்களையும் சீன அரசாங்கம் வலிமையான முறையில் பயன்படுத்தியது. கொவிட் - 10 இற்கு எதிரான போராட்டத்தில் மக்களின் உணர்வுத்துடிப்புக்களைத் தாராளமாக உணர்ந்துகொண்ட அந்நாடு தொற்றுக்கு உள்ளானவர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்தியது.

மக்களின் ஸ்மார்ட் தொலைபேசிகளை நெருக்கமாகக் கண்காணித்தல், முகத்தை அடையாளம் காணும் இலட்சக்கணக்கான கமராக்களைப் பயன்படுத்தல் மற்றும் தங்களது உடல் உஷ்ணத்தை மற்றும் மருத்துவ நிலைமைகளைப் பரிசோதிப்பதற்கு மக்களை இணங்கவைத்தல் ஆகிய செயற்பாடுகளின் மூலமாக, கொரோனா வைரஸ் காவிகள் என்று சந்தேகிக்கப்படக்கூடியவர்களை விரைவாக அடையாளம் காணக்கூடியதாக இருந்தது மாத்திரமன்றி, அவர்கள் தொடர்புகொண்ட ஒவ்வொருவரையும் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. 

கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராடுவதற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நாடு சீன மாத்திரமல்ல. இஸ்ரேலிய அரசாங்கம் வழமையாகப் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டைகளுக்குப் பயன்படுத்துகின்ற கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை கொவிட் - 19 நோயாளிகளைக் கண்டறிவதற்குப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்களுக்கான சிகிச்சைக்கு எந்த செயன்முறையும் பயன்படுத்துவதற்கு இயல்பாகவே அனுமதிக்கப்படுவார்கள் என்கின்ற அதேவேளை, தனிப்பட்டவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்குத் தொழில்நுட்பத்தை அரசாங்கம் பயன்படுத்த முடியும் என்பது உண்மையிலேயே ஒரு அச்சம்தரும் நிலைமையாகும். அது மக்களின் அந்தரங்கத்தை மீறுவதாக இருக்கின்ற அதேவேளை, மக்களின் உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றைத் தொலைவில் இருந்தேனும் கண்காணிப்பதற்கான ஆற்றல், பிரஜைகளின் நடத்தைகளை அரசாங்கங்கள் சூழ்ச்சித்தனமாகக் கையாளுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மக்கள் வெளிக்காட்டக்கூடிய பிரதிபலிப்புக்களையும், அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதையும் கூட அரசாங்கத்தினால் அறிந்து அதற்கேற்றவாறு நடந்துகொள்ள முடியும். 

எதேச்சதிகாரிகளுக்கு நன்மை

நெருக்கடி எந்தளவிற்குப் பெரிதாக இருக்கிறதோ அந்தளவிற்கு எந்தவொரு எதேச்சதிகார அரசாங்கத்தின் ஆட்சிக்கும் நன்மை. சில எதேச்சதிகார ஆட்சிகளைப் பொறுத்தவரை கொவிட் - 19 உலகலாவிய தொற்றுநோய் கேட்ட வரம் கிடைத்ததைப் போலன்றி வேறொன்றுமில்லை. 

வழமையான நேரங்களில் அரசாங்கங்கள் பலவருடகால ஆராய்வுகளுக்குப் பிறகே தீர்மானங்களை எடுக்கின்ற என்கிற அதேவேளை, தற்போது முழு உலகிலும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற கொவிட் - 19 தொற்றுநோய் அரசாங்கங்களை அவசரமாகச் செயற்பட நிர்பந்திக்கிறது. இயல்பாகவே மக்களும் தொழிற்துறைகளும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்குத் தங்களது பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதுடன், எவ்வித சிந்தனையோ அல்லது விவாதமோ இன்றி அந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொள்கின்றன. இது ஒரு பாரிய தவறாகும்.

இத்தகையதொரு நெருக்கடியின் போது எடுக்கப்படுகின்ற முடிவுகள் அரசாங்கங்களினாலும், மக்களினாலும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அடுத்து வரப்போகும் பல வருடங்களுக்கு உலகை வடிவமைக்கும் சாத்தியமிருக்கிறது. எமது நடவடிக்கைகளும், எதிர்வினைகளும் எமது சுகாதாரப் பராமரிப்பு முறைகளை, பொருளாதாரத்தை, அரசியலை, கலாசாரத்தை - உண்மையில் எமது வாழ்வின் சகல அம்சங்களையும் - வடிவமைக்கும். எனவே அரசாஙங்கம் இந்தத் தீர்மானங்களை அதிவேகமாக, அவசரமாக எடுப்பதாக இருந்தாலும் கூட அவை ஒவ்வொன்றினதும் நீண்டகால விளைவுகள் குறித்து உன்னிப்பாகக் கவனத்தில் எடுக்கவேண்டியது மிகவும் முக்கியமாகும்.

சர்வாதிகாரக் கண்காணிப்பு

சீனாவில் காணப்பட்டதைப் போன்று இந்தத் தொற்றுநோயும் , அதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் 3, 4 மாதங்களுக்க நீடிக்கும். ஆனால் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பது என்ற பேரில் அரசாங்கங்கள் விரும்பினால் சர்வாதிகார ரீதியான கண்காணிப்பிற்குத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உண்மையாகவே தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கங்களின் கவனம் உடனடி அச்சுறுத்தல் பற்றியதாக மாத்திரம் இருக்கக்கூடாது. நெருக்கடி அருகிப்போகும் போது என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். சீனா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலுள்ள அரசாங்கங்கள் இதனைச் செய்கின்றனவா என்பது தான் இங்கு எழும் கேள்வி. உலகளாவிய தொற்றுநோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கென்று கூறிக்கொண்டு தொழில்நுட்பத்தையும், செயற்கை விவேகத்தையும் பயன்படுத்துவதில் அரசாங்கங்களுக்கு இருக்கக்கூடிய அனுகூலம் என்னவென்றால் எமது அந்தரங்கத்தை நாம் பறிகொடுக்கும் சாத்தியமேயாகும்.

அத்தகைய தொழில்நுட்பத்தின் மூலம் திரட்டப்படும் தரவுகள் எமது அரசியல் கருத்துக்களை, விருப்புக்களை, நாம் அனுபவிப்பவற்றை, எம்மை எது கோபப்படுத்துகிறது என்பதை - உண்மையில் எமது ஒவ்வொரு உணர்வுகளையும் பயங்கரமானளவு கச்சிதமாக அரசாங்கங்கள் அறிந்துகொள்ள வழிவகுக்கும்.

அறிவு தான் அதிகாரம். ஒரு அரசாங்கம் அதன் ஒவ்வொரு பிரஜையையும் பற்றிய கச்சிதமான தகவல்களைப் பெறுவதையும் விடப் பலம்பொருந்திய கருவி என்னதான் இருக்கப்போகிறது? அத்தகைய தொழில்நுட்பங்கள் பிரத்யேகமாக கொவிட் - 19 கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கே பயன்படும் என்று அரசாங்கங்கள் வாதிடக்கூடும் எனும் அதேவேளை, இத்தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் அரசாங்கங்கள் அந்த நடைமுறையைத் தொடர்வதை நிறுத்துவது யார்? 

(அலி ஷா அப்துல் உலாய் - டெக்கான் க்ரோனிக்கல்)