(எம்.மனோசித்ரா)

ஊரடங்கு சட்டத்தின் காரணமாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதோருக்கு அவற்றைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் சமூர்தி கொடுப்பனவை இன்றைய தினத்திற்குள் பூர்த்தி செய்தல் என்பவை தொடர்பில் அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட ஜனாதிபதி செயலணி கவனம் செலுத்தியுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டம் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே இவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாட்டில் அத்தியாவசிய சேவை வழங்குவதற்காக தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் இதன் போது முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டதோடு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது , கையில் பணமிருந்தும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இன்னும் கிடைக்கப் பெறாதவர்களுக்கு அவற்றை வழங்கும் தற்போதுள்ள நடைமுறையின் மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும் மருந்துகளை விநியோகித்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களத்தோடு இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்த கவனம் செலுத்தப்பட்டது.

கையில் பணமில்லாத ஆனால் வங்கி கணக்குகளில் பணத்தைக் கொண்டிருப்போர் அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதை வழிவகுப்பதற்கான உத்திகள் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவை இன்றைய தினத்திற்குள் பூர்த்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தொழில்களை இழந்து அரசாங்கத்தின் உதவி பட்டியலில் சேர்க்கப்படாதோருக்கான நிவாரண வழிமுறைகள் பற்றியும் உணவு பொருட்களின் உள்ளுர் உற்பத்தியை அதிகரிப்பதன் அவசியமும் அரிசி, மரக்கறிகள் , மீன், கோழியிறைச்சி ஆகியனவற்றில் அடுத்த பருவத்தில் தன்னிறைவை அடைதல் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

விலங்கு உணவுகள் விநியோகத்தையும் போக்குவரத்தையும் முன்னேற்றுவதன் மூலமாக இலங்கையின் கால் நடை தொழிற்துறையைப் பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.