(எம்.எப்.எம்.பஸீர்)

புத்தளம் மாவட்டம், சிலாபம் - நாத்தாண்டி பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளரின் குடும்பத்தில் ஐவருக்கு கொரோனா - கொவிட் 19 தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சர்  பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.  இந்த ஐவரில் 4 மாதா குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை  அடையாளம்  காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.  இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்  மேலும் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இன்றும் மூவர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி தற்போது கொரோனா தொற்றாளர்கள் 107 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்தை ஆதார வைத்தியசாலை மற்றும் முல்லேரியா ஆதார  வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஒரே குடும்பத்தின் ஐவருக்கு கொரோனா; 4 மாதா குழந்தையின் தாய்க்கு இதுவரை இல்லை.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின்  சென்னைக்கு சென்ற நபர் ஒருவர் மீள 12 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.  குறித்த நபருக்கு கடந்த 27 ஆம் திகதி காய்ச்சல் ஏற்படவே அவர் மாரவில வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாகவும்,  அங்கிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில் 28 ஆம் திகதி அவருக்கு கொரோன தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

குறித்த நபர் தான் இந்தியா சென்று வந்தமையை சுகாதார அதிகாரிகளுக்கோ பொலிசாருக்கோ அறிவிக்காமல் ஊர் முழுதும் சுற்றியுள்ளதாகவும், கொழும்புக்கும் வந்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய 14 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் அவரது குடும்ப அங்கத்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் உடனடியாக அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  பொரளை மருத்துவ ஆய்வு மையத்தில் இடம்பெற்ற பரிசோதனைகளிலேயே இது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் மனைவி,  இரு இளம் பிள்ளைகள்,  மகள் ஒருவரின் 4 மாதா குழந்தை ஆகியோருக்கே இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  எனினும் குழந்தையின் தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. அதன்படி, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில் தற்போதும் அந்த குடும்பம் வசித்த நாத்தாண்டி பகுதி முற்றாக முடக்கப்பட்டு  அப்பிரதேச மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 122 பேரில்  இரு வெளிநாட்டவர்கள் உட்பட 100 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஏனையோர் வெலிகந்தை, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுகின்றனர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 23 வைத்தியசாலைகளில் 114 பேர் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில்  சிகிச்சைப் பெற்று வருவதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே மார்ச் 16 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தோர், பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யாமல் இருப்பார்களாயின் அவர்கள் உடனடியாக ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பதிவு செய்யுமாறும் இன்றேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.