(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வேலைத்திட்டத்தில் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மருத்துவ வேலைத்திட்டங்களை  மாத்திரமே முன்னெடுக்க முடியுமே  தவிர அரசியல் வாதிகள், அமைப்புகள் கூறுவதற்கு ஏற்ப எதனையும் செய்ய முடியாது சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை நாட்டில் இருந்து முற்றாக நீக்குவதும் மக்களை பாதுகாக்க அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து எவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து ஆராயும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அரச மருத்துவர் சங்க அதிகாரிகள் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

இதன்போதே அமைச்சர் இவற்றை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளை முற்றாக அகற்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே எம் அனைவரதும் தேவையாக உள்ளது. 

இந்நிலையில் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க மருத்துவர்களின் ஆலோசனைகளை மற்றும் மருத்துவ வேலைத்திட்டங்களை மாத்திரமே நாம் கையாண்டு வருகின்றோம். 

இதில் அரசியல் வாதிகளின் தலையீடுகள், அவர்களின் அரசியல் கருத்துக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பவற்றை நாம் கருத்தில் கொண்டு அவர்களுக்காக வேலைசெய்ய முடியாது. 

அதேபோல் இந்த நோய் பரவல்களில் இருந்து நாட்டினையும் மக்களையும் காப்பாற்ற அனைவரும் எதோ ஒருவிதத்தில் ஒத்துழைப்பு வழங்கி அரசியல் பாகுபாடுகள் எதுவும் இல்லாது செயற்பட முடியும் என்றால் ஒரு நாட்டவராக நாம் அனைவரும் மகிழ்ச்சி யடைய முடியும்.

இந்த போராட்டத்தில் மருத்துவத்துறையினரே தலைவர்கள். நீங்கள் முன்னின்று எம் அனைவரையும் காப்பாற்றுகின்றீர்கள். ஆகவே நீங்கள் ஆரோக்கியமான எந்த நடவடிக்கை எடுப்பினும் அதற்கு அரசாங்கமாக நாம் சகல ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளோம். மருத்துவத்துறைக்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுக்க ஒரு குழுவாக நாம் அனைவரும் செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.