“கொரோனா” வைரஸ் பரவாமல் கட்டுப் படுத்தும் வகையில்  ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம்  இன்று காலை ஆறு மணி முதல் மதியம் இரண்டு மணிவரை தளர்த்தப்பட்டதையடுத்து அட்டன் நகரில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் பொது மக்கள் நாட்டம் காட்டினர்.

 

அதிகாலை முதல் பல்பொருள் அங்காடி, பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், சதொச மற்றும் மொத்த விற்பனை நிலையம் முதலானவற்றில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களைப் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தது.

அதேபோன்று மருந்தகங்களின் முன்பாகவும்,  ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்பாகவும் மக்கள் நீண்ட வரிசையில்  காத்திருந்து தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டனர். 

   

நகரின் பல இடங்களிலும் காய்கறி வகைகள் விற்பனை செய்யப்பட்டன. மீண்டும்  பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக மரக்கறி வகைகளை கொள்வனவு செய்வதற்கு நகர சபை ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

வெளியிடங்களிலிருந்தும் வியாபாரிகள் மரக்கறி, தேங்காய் முதலானவற்றை விற்பனை செய்தனர்.

 இதேவேளை தேங்காய் ஒன்று 60 ரூபா முதல் 90 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. எனினும், கிடைத்ததை வாங்கிக்கொண்டால் போதும் என கூடுதல் விலையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் கூடுதலாக சிரத்தை எடுத்துக்கொண்டதன் காரணமாக நகரில் வாகன நெரிசலும் காணப்பட்டது.

வர்த்தக நிலையங்கள், வங்கிகள் முதலான இடங்களில் மக்கள் வரிசையாக நிற்பதற்கு வசதியாக ஒரு மீற்றர் இடைவெளி விட்டு கோடுகள் போடப்பட்டிருந்தன.

அந்த இடங்களிலும், பிரதான சந்திகள் மற்றும் முக்கிய கடவைகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்திருந்தார்கள்.