(எம்.மனோசித்ரா)

இந்த நெருக்கடியான நிலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளமை குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தேசிய பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இவர்கள் பற்றி விசேட கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஸ்திரமான முடிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

இன்று அவரது பேஸ்புக் பக்கத்தில் காணொளியொன்றை பதிவு செய்துள்ள அவர் அதில் மேலும் கூறுகையில்,

சமுர்தி பயனாளிகள் அனைவருக்கும் எவ்வித பேதமும் இன்றி அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் அரசியல் , பொருளாதார இலாபத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போதுள்ள சூழல் நன்மையானாலும் தீமையானாலும் நாம் மக்கள் பக்கமிருந்து சிந்திக்க வேண்டும். அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைவருக்கும் எனது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போன்று இராணுவம் மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பிற்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

இருந்த போதிலும் இந்த நெருக்கடியான நிலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளமை குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தேசிய பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இவர்கள் பற்றி விசேட கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஸ்திரமான முடிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.

சமுர்தி பயனாளிகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறி தற்போது 5000 ரூபாவே வழங்கப்படவுள்ளது. அனைத்து சமூர்தி பயனாளிகளுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமா என்பதே எமது கேள்வியாகும். கட்சி , இனம் , மதம் என்ற எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுடன் ஏனைய தினக் கூலிக்கு வேலை செய்பவர்கள் குறித்தும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேரடி கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம். இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் அரசியல் , பொருளாதார இலாபம் கிடைக்கும் என்பதாலேயே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றார்.