(ஆர்.யசி)

கொழும்பு, புத்தளம், கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை  தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்ட கால எல்லைக்குள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் அவதியுற்ற நிலை காணப்பட்டது.

காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையில் ஊரடங்கு தளர்வு காலம் வழங்கப்பட்ட நிலையில் மக்கள் தமக்கான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டனர்.

ஊரடங்குச்சட்டம் தளர்க்கப்பட்ட கால எல்லைக்குள் மக்கள் கடைகள், வியாபார நிலையங்கள், வங்கிகள், சமுர்தி நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரச,தனியார் மருந்தகங்கள் என அனைத்திலும் தமக்கான பொருட்களை பெற்றுக்கொண்டதை  அவதானிக்க முடிந்தது. 

இதனால் பல பகுதிகளில் வாகன மற்றும் சன நெரிசல் நிலைமைகள் காணப்பட்டன.

எனினும் இதற்கு முன்னர் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தவுடன் மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள அல்லோலகல்லோலப்பட்டு கூட்டம் கூடியதை போல் அல்லாது பெரும்பாலான பகுதிகளில் மக்கள் பொறுமையாகவும், சுகாதார ஆலோசனைகளை கருத்தில் கொண்டும் செயற்பட்டனர். 

ஒவ்வொரு தனி நபருக்கும் இடையில் ஒரு மீட்ட இடைவெளியை பின்பற்றல் மற்றும் முகக் கவசங்களை அணிந்த வண்ணம் பெரும்பாலான மக்கள் நடந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.

எனினும் சில பகுதிகளில் மக்கள் சுகாதார ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாது கூட்டங்கூடியும் பேருந்துகளில் நெருசளாக பயணித்தும் செயற்பட்டனர். 

இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்த பொலிசார் மற்றும் சுகாதார சேவையாட்கள் செயற்பட்டனர். அதேபோல் இன்று காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையிலும் வாகன நெரிசல் பல இடங்களில் ஏற்பட்டது. இதனால் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

எவ்வறு இருப்பினும் பிற்பகல் 2 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அடுத்த அவகாச காலம் வரையில் தமக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் விதத்தில் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டதை அவதானிக்க முடிந்தது.