-சேகர் குப்தா -

புதுடில்லி, ( த பிறின்ற் ) கொரோனா வைரஸ் பரவலுக்காக சீனாவைக் குற்றஞ்சாட்டவேண்டுமா இல்லையைா? உலகளாவியரீதியில் இப்போது  மூண்டிருக்கின்ற மிகப்பெரிய விவாதம் இதுவேயாகும். கொவிட் - 19 " சீனவைரஸ் " என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்ட அதேவேளை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ அதை " வூஹான் வைரஸ் " என்று வர்ணித்தார்.மேற்குலகில் இருந்து வெளிவருகின்ற கருத்துக்களையும் வருணனைகளையும் நோக்கும்போது சீனா மீது வெறுப்புணர்வு இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.   மறுபுறத்தில் சீனர்கள் அவற்றை இனவெறியினதும் பாகுபாட்டினதும் வெளிப்பாடுகள் என்று கூறுவதன் மூலமாக பதிலடியைக் கொடுக்கிறார்கள். அவர்களும் போட்டிக்கு சதிக்கோட்பாடுகளை பிரசாரப்படுத்துகிறார்கள். இந்த வைரஸின் தோற்றுவாய் அமெரிக்காவே என்பதும்  கடந்த வருடம் வூஹானில் இடம்பெற்ற உலக இராணுவ பயிற்சியின்போது அமெரிக்க இராணுவமே வைரஸை சீனாவுக்கு கொண்டுவந்து சேர்த்தது என்பதும் அத்தகைய சதிக்கோட்பாடுகளில் மிகவும் பிரபல்யமானதாகும்
    அதேபோன்றே இத்தாலியே இந்த வைரஸின் தோற்றுவாய் என்ற சதிக்கோட்பாடு சீன சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் உலா வருகிறது.   பெருமளவுக்கு ரஷ்யாவின் பிரசாரங்களைப் போன்றே, முரண்பாடான பல்வேறு சதிக்கோட்பாடுகளை பரப்புவதே இப்போது சீனாவின் தந்திரோபாயமாக இருப்பதாக தோன்றுகிறது ; ஒரு விளக்கத்தை  மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக அல்ல, உண்மை தெரியவருவதை அசாத்தியமாக்குவதற்காக கருத்துக்களை தோற்றுவிக்கவே சீனா இவ்வாறு செயகிறது.
   ஜனவரி முற்பகுதியில் சில டாக்டர்கள் கொவிட் - 19 கொரோனா வைரஸை கண்டுபிடித்தார்கள். ஆனால், அது பற்றிய செய்தி மூடிமறைக்கப்பட்டது. வைரஸ் பரவல் ஆபத்து ஒன்று இருப்பதாக எச்சரிக்கை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். உலக சுகாதார நிறுவனமும் இந்த வைரஸ் இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதரில் இருந்து மனிதருக்கு வைரஸ் தொற்று எதுவும் ஏற்படவில்லை என்று அந்த நிறுவனம்  ஜனவரி 14 ஆம் திகதி ருவிட்டரில் பதிவுசெய்தது. ஜனவரி 21 ஆம் திகதியே வைரஸ் இருப்பதை சீன அரசாங்கம் முதற் தடவையாக ஏற்றுக்கொண்டது. பிறகு ஜனவரி 23 ஆம் திகதி வூஹானை முடக்கும் அறிவிப்பை சீன அரசாங்கம் செய்தது.
   ஆனால், அந்தவேளையில் காலம் கடந்துபோய்விட்டது. அதுவரையில் சீனப்புத்தாண்டு விடுமுறைக்காக மக்கள் பலர் சீனாவின் நகரங்களுக்கிடையில் பயணம் செய்திருந்தார்கள். அதனால் வைரஸ் பற்றி அரசாங்கம் கூடுதலான அளவுக்கு வெளிப்படையானதாக செயற்பட்டிருக்கவேண்டும். புத்தாண்டு விடுமுறைக்காக சுமார் 50 இலட்சம் மக்கள் ஜனவரி 23 மட்டில்  வூஹானுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்திருந்ததாக அந்த நகர மேயர் ஷூ சியான்வாங் கூறினார்.
   வைரஸ் ஒரு ஆய்வுகூடத்தில் இருந்து உருவாகவில்லை என்பது இன்று நிரூபணமாகிவிட்டது. வூஹானில் உள்ள ஈரலிப்பு நிறைந்த  வனவிலங்குச் சந்தைகளில் இருந்தே வைரஸ் தோற்றம் பெற்றது என்பற்கு சகல சான்றுகளும் இருக்கின்றன. வைரஸ் பெரும்பாலும் வௌவால்களில் இருந்து எறும்புதின்னி விலங்குகளுக்கு ( பங்கோலின்) பாய்ந்து பிறகு எறும்புதின்னிகளின் இறைச்சியை மனிதர்கள் சாப்பிட்டபோது அவர்களுக்கு தொற்றிக்கொண்டது. எறும்புதின்னிகளின் செதில்களை உண்பது பாலியல் செயற்பாடுகளுக்கு ஊக்கம் தருவதாக சீனப்பாரம்பரிய மருத்துவத்தில் நம்பப்படுகிறது.
   2003 ஆம் ஆண்டில் ' சார்ஸ் ' நோய் பரவியதைத் தொடர்ந்து வனவிலங்கு சந்தைகளைத் தடைசெய்யுமாறு பல விஞ்ஞானிகள் வலியுறுத்தியதுடன் அவ்வாறு செய்யாவிட்டால் நேரக்கூடிய விளைவுகள் குறித்தும் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால், ஒரு குறுகிய காலகட்டத்துக்கு மாத்திரமே அந்த சந்தைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
    விஞ்ஞானிகளின் ஆலோசனைகளுக்கு செவிமடுக்காதமைக்காகவும்  வைரஸ் வெளியில் வந்ததும் அதை மூடி  மறைத்தமைக்காகவும் சீன அரசாங்கம்  கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. பெய்ஜிங்கில் உள்ள ஒரு சட்டத்துறை பேராசிரியர் ஸூ ஷாங்ரூன் தனது இணையவலைப்பதிவில் அரசாங்கத்தை கண்டனம் செய்தார்." கொரோனா வைரஸ் சீன ஆட்சிமுறையின் அழுகிப்போன மையப்பகுதியை அம்பலப்படுத்தியிருக்கிறது " என்று அவர் கூறினார்.
    ஸூ ஷாங்ரூனி்ன் வலைப்பதிவு அகற்றப்பட்டது. அவரும் காணாமல்போனார். வெளிப்படையாகப் பேசியமைக்காக ஆட்களை சீன அரசாங்கம் கைதுசெய்திருக்கிறது. இத்தகைய ஏதேச்சாதிகார முறைமை தற்போதையதைப் போன்ற உலகளாவிய தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. சீனாவைப் போன்ற சர்வாதிகார தேசம் ஒன்றில் மாத்திரமே வைரஸ் பற்றிய தகவல்களை மறைக்கமுடியும்.