(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) 

தேசிய அடையாள அட்டையில் இன ரீதியாக பாரபட்சம்  காணப்படுகின்றதென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன்  மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள  “X” என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட அட்டைகளுக்குப் பதிலாக  அனைவருக்கும் ஒரே வகையிலான  தேசிய அடையாள அட்டைகளே வழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்பதிவு திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

 அவர் மேலும் கூறுகையில் இந்த நாட்டில் உள்ள அனைவரும் பதிவு செய்யப்படவேண்டுமென்பது மிகவும்  முக்கியமானதொரு விடயம்.  

 இந்த நாட்டில்  ஆட்களை பதிவு செய்தவதில் இனரீதியான பாரபட்சம்  காணப்படுகின்றது.  குறிப்பாக எமது நாட்டு பிரஜைகளான  மலையக வாழ் சகோதரர்களின் தேசிய அடையாள அட்டைகளில்  தற்போதும் “X” என்ற ஆங்கில எழுத்து காணப்படுகின்றது. 

அவர்களும் இந்த நாட்டவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும்  தற்போது வரையில் ஏனையவர்களின் அடையாள அட்டைகளில் காணப்படும் “V” என்ற எழுத்து மலையக மக்களின் அடையாள அட்டைகளில் பொறிக்கப்படவில்லை. இது பாரபட்சமான செயற்பாடாகும்.  ஆகவே இந்த நாட்டில் வாழும்  அனைவருக்கும்  இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில்  ஒரே வகையிலான அடையாள அட்டை வழங்கப்படவேண்டுமென்பது முக்கியமாகின்றது.