(ஆர்.ராம்)

2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி 3.6 சதவீதம் குறைந்து 1,931 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இலங்கை ஏற்றுமதியாளர்கள் 174 நாடுகளுக்கு 2,429 தயாரிப்புகளை அனுப்புவதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கைளின் ஏற்றுமதிகளை அமெரிக்கா 260 மில்லியன் டொலர்களுக்கும் இங்கிலாந்து, 95 மில்லியன் டொலர்களுக்கும், இந்தியா 73 மில்லியன் டொலர்களுக்கும், ஜெர்மனி 51 மில்லியன் டொலர்களுக்கும், இத்தாலி 40 மில்லியன் டொலர்களுக்கும் கொள்வனவு செய்கின்றன.

குறிப்பாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் பெறப்படும் 939 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி,ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கொள்வனவு முக்கியமானது.

தேயிலை ஏற்றுமதி மூலம் 208 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைப்பதோடு இலங்கை தேயிலைக் கொள்வனவில், துருக்கி மற்றும் ரான் ஆகிய நாடுகள் முக்கியமானவையாக காணப்படுகின்றன.

தெங்கு உற்பத்திப் பொருட்கள் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைப்பதோடு அமெரிக்கா,ஜெர்மனி, இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த உற்பதிகளை கொள்வனவு செய்கின்றன.

முடிவுறுத்தப்பட்ட இறப்பர் தயாரிப்புகளான டயர்கள்,கையுறைகள், முத்திரைகள், உள்ளிட்ட பொருட்கள் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், வியட்நாம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அந்த ஏற்றுமதி ஊடாக 142 மில்லியன் டொலர்கள் வருமானமான கிடைத்து வந்தபோதும் அவ்வருமானம் 9 மில்லியன் டொலர்களால் குறைவடைந்துள்ளன. மின்சார மற்றும் மின்னணு மற்றும் இயந்திர தயாரிப்புகளை இந்தியா, மாலத்தீவு மற்றும் மெக்ஸிகோவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்வதால் 12 மில்லியன் டொலர்கள் வருமானத்தினை பெற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.