(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு அமைய கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை மன்னார் - முலங்காவில் பிரதேசத்திலுள்ள கடற்படை தளத்திலும் ஒலுவில் கடற்கரை பிரதேசத்திலும் இரு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய நான்கு மாடிகள் கொண்ட கட்டடத்தில் இந்த தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 64 பேரை தங்க வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதே வேளை ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இரு மாடிகள் கொண்ட கட்டடத்தில் 80 பேரை தங்க வைத்து கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்காக இங்கு வருபவர்களின் சுகாதார நலனுக்கான மருத்துவ வசதிகள் , இணைய வசதிகள் , தொலைக்காட்சி மற்றும் வானொலி வசதிகள் உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடற்படையின் பொது சுகாதார பரிசோதகர்களால் உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.