(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருசிலரின் பொறுப்பற்ற செயலின் காரணமாகவே அக்குரணை மற்றும் அட்டுளுகம முற்றாக சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் தாக்கம்  தீவிரமாக  பரவும் அபாயம் உள்ளதால் முஸ்லிம்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

அத்துடன் ஒருசிலர்  ஊரடங்கு  சட்டத்தை மீறி  நடப்பது முழு  சமூகத்திற்கும்  அவப்  பெயரை ஏற்படுத்தி இருக்கின்றது என  ஜனாதிபதியின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தில் ஒருசிலர் சட்டதை மீறி செயற்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டுவதே இஸ்லாமிய வழிமுறையாகும். நபிவழியும் இதுவாகும். ஊரடங்கு காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசாங்கமும் உலமா சபையும்  அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. 

அரசாங்கத்தினதும் உலமா சபையினதும் அறிவுறுத்தல்களை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சரிவர கடைப்பிடித்துவருகின்றனர் ஆனால் ஒரு சிலர் இதற்கு மாற்றமாக நடந்து முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேளையில் ஹொரவப் பொத்தானை, பேருவேலை  போன்ற பகுதிகளில் நாட்டின் சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையோரின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் சமூகம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றியோர்  தம்மை சமூகத்தில் இனங் காட்டிக் கொள்ள அச்சப்பட்டு தலைமறைவாகினர். இது எயி ட்ஸ் நோய் போன்று வெட்கப்படக் கூடியதொன்றல்ல.  தங்களுக்கு நோய் தொற்று இருப்பதை சிலர் மறைத்ததன் காரணமாகவே சில ஊர்கள் மூடி விட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 

 வெளிநாட்டில் இருந்து வந்த நபரை வீட்டில் தனிமைப்படுத்தி நடந்துகொள்ளவேண்டும் என சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தி அனுப்பப்பட்டும் அவர் பொறுப்பற்று செயற்பட்டதன் காரணமாகவே அட்டுலுகம  கிராமம் மூடப்பட்டிருக்கிறது. 

அதேபோன்று இந்தோனேசியாவுக்கு ஜமாஅத் சென்றுவிட்டு வந்த சிலர் காரணமாக புத்தளம் மற்றும் அக்குரணை பகுதியில் உள்ள கிராமங்கள் மூடப்பட்டிருக்கின்றன. 

ஒரு சிலரின்  தவறால் முழு கிராமமும் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நோய் தொற்று இருப்பதை மறைப்பது கொலை முயற்சிக்கு சமமானதாக கருதப்பட்டு இத்தாலியில் வழக்கு தொடரப்படுகிறது.

 மேலும் ஊரடங்கு சட்டம் காரணமாக சாதாரண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நான் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடினேன். குறிப்பாக நாட்சம்பளம் பெறுபவர்கள், மத்திய தர வர்க்கத்தினர் போன்றோருக்கு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம்  நாளை  செவ்வாய்க்கிழமை முதல் கிராமசேவகர் ஊடாக உணவுப் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.