இரண்டுபேரிற்கு மேல் பொது நிகழ்வுகளிலும் பொது இடங்களிலும் கூடுவதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறையை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் அவுஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களை வீடுகளில்  இருக்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் பொது நிகழ்வுகளில் ஆகக்குறைந்தது பத்து பேர் கூடலாம் என தெரிவித்தது.

வெளி மற்றும் உள்ளக நிகழ்வுகளில் பத்து பேர் காணப்படலாம் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் மிகக்கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

பொது இடங்களில் பொது நிகழ்வுகளில் இருவருக்கு மேல் காணப்படுவதற்கு தடை விதித்துள்ளது.

வெளியிலும் உள்ளக நிகழ்வுகளிலும்  இரண்டு பேர் மாத்திரமே கலந்துகொள்ளலாம் என பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களிற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் மருத்துவ தேவைகளிற்கும் மனிதாபிமான தேவைகளிற்கும் வெளியில் செல்லமுடியும் என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும் வீடுகளி;ற்குள் வாழும் நபர்களின் எண்ணிக்கையை இந்த கட்டுப்பாடு பாதிக்காது எனவும் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

உங்கள்  குடும்பத்தில் நால்வர் காணப்பட்டால் நீங்கள் உங்கள் நாயுடன் வெளியே செல்ல விரும்பினால் நீங்கள் வெளியே போகலாம் என தெரிவித்துள்ள பிரதமர் ஆனால் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்ல விரும்பினால் இரண்டுபேர் மாத்திரமே செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இறுதிசடங்குகள் திருமண நிகழ்வுகளில் பத்துபேர் கலந்துகொள்ளலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏபிசி தெரிவித்துள்ளது.

விளையாட்டு மைதானங்கள் போன்றவை திங்கட்கிழமை முதல் மூடப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்கொட்மொறிசன் பாரதூரமான நோய்களை உடைய 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், 70 வயதிற்கு மேற்பட்டவர்களும்  பூர்வீக குடிகளில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களும் சாத்தியமான அளவிற்கு வீடுகளிற்குள்ளேயே இருக்கவேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது அவர்களது சொந்த பாதுகாப்பிற்காகவும் ஏனைய சமூகத்தவர்களுடன் தொடர்பை கட்டுப்படுத்துவதற்காகவும் விடுக்கப்படும் வேண்டுகோள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அர்த்தம் அவர்கள் வெளியே செல்ல முடியாது என்பதல்ல ஆனால் அவர்கள் நபர் ஒருவரின் ஆதரவுடன் வெளியே செல்லமுடியும், ஏனையவர்களுடன் அவர்கள் தொடர்புகளை தவிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறைகள் திங்கட்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வரும்.