திருகோணமலை பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்து கடலுக்கு சென்ற ஒரு மீனவரை கடற்படையினர் கரைக்கு அழைத்து வந்தனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு நபர் திருகோணமலை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றபின் ரகசியமாக மீண்டும் கரைக்குத் திரும்ப முயன்றுள்ளார் என்று திருகோணமலை பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்தனர்.

இதன் பின்னர் கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் சந்தேகத்திற்கிடமான நபர் சென்ற படகை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த நபர் பயணித்த படகு உட்பட மேலும் இரண்டு படகுகளை சந்தேகத்தின் பேரில் கடற்படை கைது செய்துள்ளதுடன் படகுகளில் பயணித்த 10 நபர்களையும் கண்டுபிடித்து திருகோணமலை துறைமுகத்திற்கு கடற்படையினர் அழைத்து வந்தனர்.

அதன் பின்னர், அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி கடற்படை மருத்துவர்கள், இந்த நபர்களுக்கு ஆரம்ப நோய் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து சோதனையும் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் அவர்களின் படகுகள் கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவால் கிருமி நீக்கம் செய்யப்பட்டன.

இதேவேளை கடற்படையால் அழைத்துவரப்பட்ட அனைவருமே தனிமைப்படுத்தலுக்காக சாம்பூர் கடற்படை முகாமில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.