(எம்.எப்.எம்.பஸீர்)

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு  தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தற்கொலை தாக்குதல்தாரியை அழைத்துச் சென்று வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருந்ததுடன், 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

21/4 - 2019 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற  தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில்  பிரதான குற்றவியல் விசாரணைகளில் பிரதான சந்தேக நபர் ஒருவர் இன்று சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  காலி வீதி, கல்கிசை எனும் முகவரில் வசித்த பிரதான சந்தேக நபர்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவும் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் , மட்டக்களப்பு சியோன் தேவாலயம்  மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபரை  அங்கு அழைத்துச் சென்று, அவரை வழி நடாத்தியுள்ளமை  விசாரணைகளில் தெரியவந்ததாகவும் அதனை தொடர்ந்தே பிரதான சந்தேக நபராக குறித்த நபரைக் கைது செய்துள்ளோம். அவரிடம்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தீவிர  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். 

இந் நிலையில் இதுவரையிலான விசாரணையில் இந்த சந்தேக நபர்  கொழும்பு - கொச்சிக்கடை தேவாலய  தற்கொலை குண்டுதாரியையும் வழி நடாத்தியமை தெரியவந்துள்ளதாகவும்,  ஏனைய குண்டுதாரிகளுடன் சந்தேக நபருக்கு இருந்த தொடர்ப்பு, இந்த பயங்கர்வாத நடவடிக்கையின் பின்னனியில் இருந்தவர்கள் தொடர்பில் அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

21/4 - 2019 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற  தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி.யினர். ஆரம்பத்தில் சிறப்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இடை நடுவே சிற் சில குற்றச்சாட்டுக்கள் பொலிசார் மீது சுமத்தப்படவே, அதனை கருத்தில் கொண்டு விசாரணை அதிகாரிகளை மாற்றியேனும் விசாரணைகளை முன்னெடுக்க பதில் பொலிஸ் மா அதிபர் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார். அதனையடுத்து விசாரணை அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

 அதில் தொலைபேசி பகுப்பாய்வுத் தகவல்கள்,  தற்கொலை குண்டுதாரிகளின் பயணப் பாதை பகுப்பாய்வு உள்ளிட்டவற்றை ஆராய்ந்த போதே   இந்த சந்தேக நபர் சிக்கினார்.

 தர்போது இந்த விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 31 பேர் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும் 60 பேர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.' என்றார்.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வாப்­பிட்டி - புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­யன தாக்­கு­த­லுக்­கி­லக்­கான கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இதனைவிட  கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய மூன்று ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி  காலை 8.45 மணிக்கும்  9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

இந் நிலை­யில் அன்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக  உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும்  சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம்  பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல்  2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரிகளை இலக்கு வைத்து  தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால்  தாக்குதல் நடாத்தப்ப்ட்டது.

 இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்ப்ட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

இந் நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பில்  சி.ஐ.டி.இன்  12 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும்   விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.