(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் ஒன்பது நாட்களுக்குள்  6,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 1,533 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவி வருகன்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு கால அவகாசம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் அதனை மீறும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும், சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர். 

இவ்வாறு செயற்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்ற நிலையிலும் இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான 6 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 206 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 56 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.