(நா.தனுஜா)

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள், முகக்கவசங்கள், பரிசோதனைக் கருவிகள், சானிட்டைஸர்கள், பாதுகாப்புக் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பெரும் எண்ணிக்கையில் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்வரிசையிலுள்ள மருத்துவ மற்றும் சுகாதார சேவையாளர்களுக்கான 1000 பாதுகாப்பு அங்கிகளை சீனா மேர்சன்ட்ஸ் போர்ட் குழுமம் நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி 'சவால் மிக்க தருணத்தில் இதயபூர்வமான உதவி' என்ற அடிப்படையில் சீனாவினால் 50, 000 முகக்கவசங்கள், 1000 பரிசோதனைக் கருவிகள் சுகாதார அமைச்சிடம் நன்கொடையாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் உலகின் முன்னணி நிறுவனமான ஐ.சி.ரி மற்றும் 5ஜி ஹுவாவி நிறுவனத்தினால் 10,000 முகக்கவசங்களும், சுகாதார சேவையாளர்களுக்கான 200 பாதுகாப்பு அங்கிகளும், 100 பாதுகாப்புக் கண்ணாடிகளும், 30 போத்தல் சானிட்டைஸர்களும் (50 லீட்டர்) சுகாதார அமைச்சிடம் நன்கொடையாகக் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.