கைவிடப்பட்ட உண்ணாவிரதத்தை மீண்டும் தொடரவுள்ளதாக கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் மனோஜ் பிரியந்த சிறிவர்த்தன தெரிவித்தார். 

விரைவில் அம்பாறை நகரில் அல்லது கொழும்பில் தனது உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் இன்று குறிப்பிட்டார்.

இடைநிறுத்திய தன்னை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைக்கவேண்டும் என நீதிகோரி அம்பாரை கஞ்சிக்குடியாறு ரூபஸ் குளம் காட்டுப்பகுதியில்  மனைவி மற்றும் 3பிள்ளைகளுடன்  அன்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த  பொலிஸ் உத்தியோகத்தர்  அம்பாரை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.ரணவீரவின் உறுதிமொழிக்கமைய கைவிட்டார்.

இன்று உண்ணாவிரதம் மேற்கொண்ட இடத்திற்கு சென்ற திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.வை.பண்டார தன்னை அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் அழைத்து சென்றதாகவும் அவருடன் ஏற்பட்ட சந்திப்பின் பயனாக 20 ஆம் தகதி பொலிஸ்மா அதிபரை சந்திப்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எனினும் இச்சந்திப்பில் பயன் ஏற்படாத பட்சத்தில் மீண்டும் தனது போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கொழும்பு பொலிஸ் தலைமைக் காரியாலயத்துக்கு தான்; மனைவி, பிள்ளைகளுடன் சென்றதாகவும் இதன்போது, தலைமை அதிகாரி யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகக் கூறப்பட்டதாகவும் எவரும் தன்னை சந்திக்கவில்லை எனவும் கூறினார்.

சிறந்த தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து தான் அங்கு சென்ற போதும் ஏமாற்றத்துடன் தான் வீடு திரும்பியதாகவும் இதனால் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.