துறைமுக வளாகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சுங்கத்தால் ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 300 கொள்கலன்கள் துறைமுக வளாகத்திலிருந்து  வெளியேற்றப்படுகிறது. 

இதில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், அழிந்துபோகக்கூடிய பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்களின் அத்தியாவசியப் பொருட்களை துறைமுக வளாகத்திலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக சுங்க இயக்குநர் ஜெனரல் சுனில் ஜெயரத்ன கூறினார்.

கொரோனா தொற்று நோயால் நாட்டின் நிலவும் சூழ்நிலையில் இறக்குமதியாளர்கள், ஏற்றுமாதியாளர்களுக்கான சேவைகளை வழங்கவும் இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கவனம் செலுத்தப்படுகின்ற நிலையில் சட்டவிரோத போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தும் அபாயம் உள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.