பொதுமன்னிப்பு  : ஜனாதிபதியின் அதிகார துஷ்பிரயோகம்

29 Mar, 2020 | 12:33 PM
image

(ஆர்.ராம்)

கொரோன வைரஸின் கோரதாண்டவம் உலகெங்கும் வியாபித்து வருகிறது. இலங்கையர்களும் அதன் உக்கிரத்தினை கண்டு உறைந்துள்ளனர். இந்த தருணத்தில் ஜனாதிபதி கோத்தாபயவின் சத்தமின்றிய செயற்பாடுடொன்று நீதித்துறையையே சவாலுக்கு உட்படுத்தியுள்ளதோடு கொரோனாவினர் தாக்கத்தினை விடவும் தமிழ் மக்களை மிகமோசமாக தாக்கிவிட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆம், 2000ஆம் ஆண்டு மிருசுவிலில் சிறுவன் உட்பட எண்மர் மிருகததனமாக கழுத்தறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு மலசல கூடத்தினுள் வீசிய சம்பவத்தில் பிரதான குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள்  இராணுவ  சிப்பாய்  சுனில்  ரத்னாயக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வினால் கடந்த 26ஆம் திகதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

தமிழனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள எத்தனையோ மிலேச்சத்தனமான கொடூரங்களுக்கான நீதிக் கோரிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில் 15ஆண்டு போராட்டத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு இலங்கை நீதித்துறையூடாகவே நீதி கிடைத்திருந்தாலும், தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளே முழுமையாக நிறைவடையாத நிலையில் குற்றவாளி அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ள விசேட அதிகாரத்தின் பிரகாரம பொதுமன்னிப்பில் விடுக்கப்பட்டுள்ளமையான உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவமும் பின்னணியும்

மூன்றாம் கட்ட ஈழப்போராட்டத்தினை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் ஆணையிறவு மற்றும் தென்மராட்சியின் சில பகுதிகளை கைப்பற்றினார்கள். இதனால் தென்மராட்சியில் வாழ்ந்தவர்கள் வலிகாமத்தையும், வடமராட்சியையும் நோக்கி இடம்பெயர்ந்தனர். 

இவ்வாறான நிலையில் 2000ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வரவும் தாம் வாழ்ந்த வீட்டினை ஒருதடவையேனும் பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்ற பேராவாவுடன் யாழ் நகரத்திலிருந்து மூன்று குழந்தைகள் உட்பட எட்டுப் பேர், டிசம்பர் மாதம் 19ஆம் திகதி மிருசுவில் நோக்கி புறப்பட்டனர். 

இராணுவத்திடம் அனுமதிபெற்று தமது சொந்த வீட்டை முற்பகல் 10 மணியளவில் வந்தடைந்தனர். முற்றத்தில் அடியெடுத்து வைத்து வீட்டைப் பார்த்தனர். சொந்த நிலத்தில் சுதந்திரமாக மூச்சுவிட்டு நிறைவதற்கும் அனைத்தும் முடிந்தன. 

வீட்டைப்பார்க்கச் சென்றவர்கள் சென்றவர்களாகவே ஆகிவிட்டிருந்தனர். மணித்தியாலங்கள் நாட்களாக, நாட்கள் மாதங்களாக அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கேள்விக்குறியானது. ஆனால் இதேபகுதியைச் சேர்ந்த மேலும் பலர் வடமராட்சி உடுப்பிட்டியிலிருந்து தமது வீடுகளைப் பார்வையிட வந்தபோது அரைகுறையாக புதையுண்டிருந்த பெண்ணொருவரின் சடலத்தினை காண்கின்றனர். அவர்கள் தமக்குள் இவ்விடயத்தினை பகிந்து கொண்டு சடலத்தினை அடையாளம் காண முற்பட்டவேளை இராணுவத்தின் பிடிக்குள் சிக்கினார்கள். 

அவர்களும் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் ஏதேவொருவாறு அதிலிருந்து வெளிவந்து தனது உறவினர்களிடத்தில் எண்மர் கொலைசெய்யப்பட்டு மலசல கூடக் குழியில் போடப்பட்ட சம்பவத்தினை விபரித்தார்.

இதனையடுத்து கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலையுண்டவர்களின் சடலங்கள் மலசலக் குழியிருந்து மீட்கப்பட்டன. எனினும் அரைகுறையாக புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இறுதிவரையில் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 

தொடர்ந்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.மாவட்ட வைத்திய அதிகாரி மரு. சி. கதிரவேற்பிள்ளை, சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்களில் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராசா பிரசாத் உட்பட மூவர் பதின்ம வயது சிறுவர்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கழுத்து வெட்டப்பட்டே கொலை செய்யப்பட்டார்கள் என்றும் சாட்சியமளித்தார். 

தொடந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து சுனில்  ரத்னாயக்க உட்பட 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதக் கைது, சித்திரவதை, படுகொலை, மற்றும் புதைகுழிகளில் புதைத்தமை உட்படப் 17 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. 

எனினும் ஐந்து இராணுவத்தினரே பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு 2002இல் அநுராதபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அந்தாண்டு மே 22இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணைகள் கொழும்புக்கு மாற்றப்பட்டன. 

அதனையடுத்து ஜுரிகள் இன்றி இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பததற்கு சட்டமா அதிபர் தீர்மானித்தமைக்கு அமைவாக அவ்வழக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதலாம் எதிரியான சுனில் ரத்நாக்கவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ஏனைய நான்கு சந்தேகநபர்களும் போதிய சாட்சிகள் இன்மையால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறை செய்யப்படவும் ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

திரிவுபடுத்தப்படும் தீர்ப்பு

பலத்த சவால்களைக் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக  போராடி அதில் வெற்றிகொண்டிருந்தாலும் ஜனாதிபதியின் செயலால் அவையெல்லாம் சிதைக்கப்பட்டு விட்டதாக கூறுகின்றார் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா. 

அதுமட்டுமன்றி பிரதான எதிரான சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்ட பின்னர், அரச தொலைக்காட்சியொன்று அந்த விடுதலை விடயத்தினை “நல்லாட்சி அரசின் காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள, மேற்குல நாடுகள் மற்றும் தமிழ் புலம்பெயர் தரப்பினர் ஆகியோரை திருப்திப்படுத்தவதற்காக இராணுவ வீரர்களை இலக்கு வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றான மிருசுவில் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்துள்ளதாக” கூறப்பட்டுள்ளது. 

இராணுவ வீரர் மீது தொடுக்கப்பட்ட வழக்கானது சில தரப்பினரை திருப்திப் படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றபோதும் உண்மை அதுவல்ல. பிறிதொரு இராணுவ அதிகாரியினாலேயே வழக்கு தொடுக்கப்பட்டதோடு சட்ட மா அதிபர் திணைக்களமே ட்ரயல் அட்;பார் முறையில் இந்த வழக்கினை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிடத்தில் கோரியிருந்தது. 

அதற்கு அமைவாகவே நீதிபதிகளான, சூரசேன, லலித் ஜயசூரிய, சுமித்திரபால ஆகியோர் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த விசாரணைகளின் அடிப்படையில் முதலாவது எதிரியான சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான சட்சியங்களின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டது என்று ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா குறிப்பிடுகின்றார். 

இதனையடுத்து அந்த தீர்ப்பினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. புவனேகு அலுவிகார, சிசிர டி ஆப்ரூவ், பிரியந்த ஜயவர்த்தன, எச்.என்.ஜி.பெரேரா ஜே, முருதுபெர்ணான்டோ ஆகிய ஐந்து நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ட்ரயல் அட்பார் விசாரணையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பினை அவர்கள் உறுதி செய்தார்கள். 

விசேடமாக, சம்பவத்தின் நேரடியச் சாட்சியான மகேந்திரனின் சாட்சியத்;தின் உண்மைத்தன்மையில் அடிப்படையில் ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதோடு 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி 24பக்கத்தினைக் உள்ளடக்கி மரதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.  இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டு ஒருவருடம் கூட நிறைவடைந்திருக்காத நிலையில் தான் குற்றவளியான இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் சட்டத்தரணி தவராசா சுட்டிக்காட்டுகிறார். 

ஓரே அணியும், சூழலும்

மிருவில் படுகொலையின் பிரதான குற்றவாளியான சுனில் ரத்நாயக்க இலங்கை இராணுவப்படையின் கஜபாகு படைப்பிரிவினைச் சேர்ந்தவராக காணப்படுகின்றார். அதேநேரம், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்~வும் இராணுவ சேவையில் இருந்த காலத்தில் கஜபாகு படைப்பிரிவிலேயே பணியாற்றியுள்ளார். ஆகவே கஜபாகு படைப்பிரிவினை மையப்படுத்தியே விடுதலை அமைந்திருக்கலாம் என்றொரு நிலைமையும் தற்போது உருவெடுக்கின்றது. 

மேலும், மரணதண்டனைக் கைதியான இந்த முன்னாள் இராணுவீரர் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தருணத்தில் அவரை அழைத்துச் செல்வதற்காக தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்.கமல் குணரட்ன சென்றிருந்தார். பாதுகாப்புச் செயலாளரின் இந்த செயற்பாட்டை எந்த வகையறைக்குள் உள்வாங்குவது என்று தெரியாதுள்ளதாகவும் சட்டத்தரணி தவராசா குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிடவும், முழு உலகுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரவலால் பதற்றத்தில் இருக்கையில் இலங்கைவாழ் மக்கள் அடுத்து வரும் மணிநேரங்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்று நெருடலாக இருக்கும் தருணத்தில் மரண தண்டனைக் கைதியொருவருக்கு மட்டும் பொதுமன்னிப்பளிக்க வேண்டிதன் அவசியம் என்ன? 

அத்துடன் கொரோன வைரஸ் தொற்று ஏற்படும் என்ற பதற்றத்தில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் போராட்டங்களை மேற்கொண்டு அதற்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் செய்யும் நிலைமை அநுராதபுர சிறையில் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதுபற்றிய கரிசனைகள் போதுமான அளவில் எடுக்கப்பட்டதாக இல்லை. 

அதனைவிட, சிறுசிறு குற்றங்களைக் செய்து தண்டப்பணம் செலுத்தமுடியாதுள்ள சூழலில் சிறைகளில் உள்ளவர்களை நோய்தொற்றின் ஆபத்தினை உணர்ந்தாவது விடுவிப்பது குறித்து எவ்விதமான பரிசீலனைகளும் செய்யப்படவில்லை. இந்நிலையில், நெருக்கடியில் இருக்கும் கைதிகளின் சுகாதார பாதுகாப்பு கருத்திற்கொள்ளப்படாத நிலையிலும் மரண தண்டனைக் கைதிக்கு முக்கியத்துவம் அளித்து விடுதலை செய்யப்பட வேண்டியதன் காரணம் என்ன? என்றும் சட்டத்தரணி தவிராசா கேள்வி எழுப்புகின்றார்.

கரிசனையே இல்லை

தற்போது தமிழ் அரசியல் கைதிகள் 84பேர் இருக்கின்றார்கள். இவர்களின் 50பேரின் வழக்கு விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் 33பேருக்கு சட்டரீதியாக அடுத்தகட்டம் எதுவுமே செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அவர்களின் விடுதலை ஜனாதிபதியின் கையிலேயே தங்கியுள்ளது. 

இவர்கள் 15இலிருந்து 25 ஆண்டுகள் சிறைவசம் அனுபவித்து விட்டார்கள். இவர்கள் எட்டுப்பேரை கொலை செய்ததைப்போன்று பாரிய குற்றங்களை இழத்தவர்கள் அல்ல. ஆகவே இவர்கள் மீது கரிசனை செலுத்தப்படாத நிலைமையே தொடர்கின்றது. மேலும் சிறைவசம் அனுபவித்து வரும் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குக்தாக்கல் செய்யப்பட்டவர்களே என்றும் சட்டத்தரணி தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். 

அதிகார துஷ்பிரயோகமும் அவமதிப்பும்

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு சகல உரித்துக்களும் உள்ளன. ஆனால் அதற்கான காரணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் கொலை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவின் விடுதலையில் அவ்வாறான எவ்வித காரணங்களும் கூறப்படவில்லை. 

அதனைவிடவும் பொதுமன்னிப்பு குறித்து நீதிபதிகளின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தினை ஜனாதிபதி சுயஇலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளமை வெளிப்பட்டுள்ளது. இங்கு அதிகார து~;பிரயோகம் நடைபெற்றுள்ளமை வெளிப்படையானது. 

மேலும் முன்னைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும் தனது பதவிக்காலத்தின் ஈற்றில் ரோயல்பார்க் கொலைக்குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளித்திருந்தார். அச்செயற்பாட்டின் ஊடாக அதிகார து~;பிரயோகம் செய்யப்பட்டுள்ளமைய குறிப்பிட்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்திருந்தேன். எனினும் வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது எதிரி வெளிநாடு சென்றுவிட்டார். இதேநிலைமை தொடர்கதையாகின்றது என்றும் தவராசா கூறுகின்றார். 

இவற்றுக்கெல்லாம் அப்பால் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரினது அமர்வு வழங்கிய தீர்ப்பும், ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வின் தீர்ப்பும் ஜனாதிபதியின் செயற்பாட்டால் நேரடியாகவே உதாசீனம் செய்யப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. இலங்கை நீதித்துறையின் அதியுச்ச அதிகாரங்களைக் கொண்ட இரண்டு நீதிமன்றக் கட்டமைப்புக்களின் தீர்ப்புக்கள் மறுதலிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் நீதித்துறையையே அவமதிக்கும் செயலாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04