கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் தொகையானது 30,000 ஆயிரத்தையும் கடந்துள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 660,000 க்கு மேல் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது. 

அமெரிக்கா: 

உலகின் கொரோனா தொற்றாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினை அமெரிக்கா கொண்டுள்ளது. அங்கு இதுவரை கொரோனாவினால் 2,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

சனிக்கிழமை நிலவரப்படி அங்கு  2,010 உயிரிழப்பு சம்பவங்களும் 117,688 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை நியூயோர்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் குடியிருப்பாளர்கள் உள்நாட்டில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தாலி:

இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது சனிக்கிழமையன்று 10 ஆயிரத்தையும் கடந்து விட்டது. 

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 889 ஆகும் என இத்தாலிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

மொத்தமாக இத்தாலியில் 92,472 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகளவான தொற்றாளர்களை கொண்டுள்ளது. அதேநேரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 10,023 ஆக காணப்படுகிறது.

ஸ்பெய்ன்:

கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக ஸ்பெய்ன் உள்ளது. அங்கு இதுவரை 5,900 க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். 

அந் நாட்டு சுகாதார அமைச்சின் கூற்றுப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 73,200 க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

ஸாண்டம் கப்பல்:

ஸாண்டம் பயணக் கப்பலில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பனாமா கால்வாய் வழியாக புளோரிடாவுக்குச் செல்ல கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 130 பேர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

அது மாத்திரமன்றி கப்பலில் பயணித்த நான்கு பேர் உயிரழந்துள்ளனர். அவர்களின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஸான்டாம் கப்பல் மார்ச் 07 ஆம் திகதி ஆர்ஜன்டீனாவின் புவெனஸ் அயர்ஸிலிருந்து புறப்பட்டது. முதலில் சிலிக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது. எனினும் கொரோனா தொடர்பான அச்சம் காரணமாக பல துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே புளோரிடாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் முதல் உயிரிழப்பு:

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 70 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்தில் கொரோனாவினால் பதிவான முதலாவது உயிரிழப்பு சம்பவம் இதுவாகும். உயிரிழந்த நபர் நான்கு நாட்களுக்கு முன்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Photo Credit : CNN