நியூயோர்க், (மார்ச் 29 ) உலகளாவிய விசாலமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைவுச் செயற்பாடு என்று வரும்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டு உழைப்பு அதில் முக்கியமான ஒரு அங்கமாகும். தற்போதைய கொவிட் -- 19 கொரோனாவைரஸ் போன்ற முன்னென்றும்  இல்லாதவகையிலான உலகளாவிய  தொற்றுநோய் ஒன்றுக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த கூட்டு செயற்பாடு மிகவும் முக்கியமானதாகும் என்று அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரிகள் பலரும் சுகாதார பராமரிப்புத்துறை நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள்.

     " எதிர்காலத்தில் தோன்றக்கூடிய எந்தவொரு உலகளாவிய தொற்றுநோயை - குறிப்பாக கொரோனாவைரஸை விடவும் கொடிய தொற்றுநோயை -சர்வதேச சமூகம் மிகவும் பயனுறுதியுடைய முறையில் கையாளுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படும் ஒத்துழைப்பு குறத்த ஒரு விழிப்பூட்டலாக கொவிட் - 19 இருக்கவேணடும் "என்று கம்போடியாவுக்கான முனனாள் அமெரிக்க தூதுவரும் உலக உணவு பவுண்டேசனின் தலைவருமான கென்னத் குயின் சின்ஹுவா செய்திச்சேவைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

    மிகவும் பாரதூரமான உலகளாவிய பொதுச்சுகாதார நெருக்கடியை கையாளுவதில் சர்வதேச சமூகத்தின் கூட்டுச்செயற்பாட்டின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் நிபணர்கள் வாஷிங்டனும் பெய்ஜிங்கும் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள்.

     " இருதரப்பு உறவுகளின் தனிச்சிறப்பியல்பாக அமைந்த முன்னைய உறுதிப்பாட்டை மீண்டும் கொண்டுவருவதற்கு உதவக்கூடிய கடும் முனைப்பான நேர்மறையான ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கான ஒப்பற்ற வாய்ப்பொன்றை கொவிட் -- 19 வழங்குகிறது.கொரோனாவைரஸ் பரவலுக்கு எதிராக போராடுவதற்கும் உலகின் எந்த மூலையில் இருந்தும் தோன்றக்கூடிய எதிர்கால தொற்றுநோய்களைத் தோற்கடிப்பதற்கும்  ஒன்றிணைந்து பாடுபடுவதற்கு அமெரிக்காவும் சீனாவும் ஊக்கப்படுத்தப்படுகின்றன " என்று 32 வருடகால இராஜதந்திரசேவை அனுபவத்தைக்கொண்ட குயின் கூறினார்.

   " விஞ்ஞான நிபுணத்துவத்தையும் ஆராய்ச்சி ஆற்றலையும் பொறுத்தவரை, எமது பூமிப்பந்தில் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த இரு நாடுகளும் பேரழிவைத்தரும் உலகளாவிய பிரளயம் ஒன்றின் அச்சுறுத்தலை மனிதகுலம் வெற்றிகொள்வதை உறுதிப்படுத்துவதில் பங்காளிகளாகச் செயற்படவேண்டியது  அவசியமாகும் " என்றும் அவர் வலியுறுத்தினார்.

    பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சாம்பியா ஆகிய நாடுகளில் அமெரிக்க தூதுவராகவும் சீனா உட்பட பல நாடுகளில் உயர்மட்ட இராஜதந்திரியாகவும் பணியாற்றிய நிக்கலஸ் பிளாட்டும்  அமெரிக்க -- சீன ஒன்றிணைந்த செயற்பாட்டின் அவசரமும் அவசியமும் தொடர்பில் குயினின் கருத்தையே எதிரொலித்தார். கொரோனாவைரஸ் தொற்றின் கடுமையான அதிகரிப்புக்கு உலகம் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற  ஒரு இடர்மிக்க நேரத்தில் இரு நாடுகளும் ஒத்துழைத்துச் யெற்படவேண்டும் என்று அவர் கூறினார்.

    " கடந்த காலத்தில் நடந்தவைக்காக  நாம் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றஞ்சாட்டிக்கொண்டிருப்பதை விடுத்து ஒன்றிணைந்து செயற்படுவதில் கவனத்தைச் செலுத்தவேண்டும் " என்று நியூயோர்க் நகரில் உள்ள ஒரு  தன்னார்வ நிறுவனமான ஆசிய சங்கத்தின் தலைவராகவும் முன்னர் செயற்பட்ட பிளாட் தொலைபேசி மூலம் சின்ஹுவாவுக்கு  கூறினார்.

    இந்த வைரஸ் குறித்து சீனாவில் உள்ள டாக்டர்களுடன் அமெரிக்க டாக்டர்கள் விளக்கப்பாட்டையும் இணக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒருவரைப் பற்றி மற்றவர் தெளிவாக அறிந்துகொண்டு சாத்தியமானளவு பெருமளவு தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கவேண்டும் என்றும் பிளாட் குறிப்பிட்டார்.

    "  இந்த வைரஸ் பாகுபாடு காட்டவில்லை.நாமெல்லோரும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவே இருக்கிறோம் " என்று  உலக சுகாதார செயற்திட்டத்தின் பணிப்பாளரான வாஃபா எல் -- சத்ர் கூறினார். விஞ்ஞான ஆராய்ச்சி போன்ற பல்வேறு முனைகளில் ஒன்றிணைந்த செயற்பாட்டை பலப்படுத்துவதன் மூலம் சீனாவும் அமெரிக்காவும் உலகளாவிய பாரிய பொதுச்சுகாதார அச்சுறுத்தல்களை கையாளுவதில் பங்களிப்புகளைச் செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அனுபவமிக்க நிபுணரான அவர் சொன்னார்.

    கொரேனாவைரஸ் போன்ற உலகளாவிய தொற்றுநோய்களுக்கு முகங்கொடுக்கின்ற மனிதகுலம் இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொள்கின்ற ஒரு சமூகமாகும். உலக சமூகத்தின் ஒன்றிணைந்த துணிவாற்றலும் செயற்பாடுகளும் அவசியமாகின்றன  என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    " இன்றைய நெருக்கடி எம்மெல்லோருக்கும் பொதுவானது. இந்த சவாலை ஒன்றுசேர்ந்தே நாம் எல்லோரும் முகங்கொடுக்கவேண்டும்.உலக நாடுகளின்  கூட்டு முயற்சிகள் எல்லோரினதும் பொதுச் சுகாதாரத்துக்கு பங்களிப்புச் செய்யும்"  என்று பிளாட் கூறினார்.

    " உலகம் பூராவுமுள்ள மக்களுக்கிடையில் சுவர்களை அல்ல, பாலங்களை அமைக்கவேண்டிய நேரம் இது. எல்லைகளுக்கு அப்பால் தகவல்களும் விஞ்ஞான தரவுகளும் பகிர்ந்துகொள்ளப்படுவதைக் காணும்போது உற்சாகமாக இருக்கிறது. அவ்வாறு பகிர்ந்துகொள்ளவேண்டியது இந்த ஆட்கொல்லி தொற்றுநோயை கட்டுப்படுத்துவதை நோக்கிய செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும் " என்று வாஃபா எல் - சத்ர் குறிப்பிட்டார்.

    வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதிக்கப்படுகின்ற மருந்துவகைகள் மற்றும் நோய்நீக்கல் முறைகளின் பயனுடைத்தன்மை பற்றிய தகவல்கள்  உட்பட ஒவ்வொரு நாட்டுக்குள் உள்ள நிலைவரங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து முழுமையாகப் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும் என்று கென்னத் குயின் வலியுறுத்தினார்.

    வைரஸ் பரவலின் ஆரம்பத்தில் இருந்தே தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. முக்கியத்துவம்வாய்ந்த தகவல்களை உலகுடன் வெளிப்படையாகவும் உரிய காலத்திலும் சீனா பகிர்ந்துகொண்டுவந்திருக்கிறது.அத்துடன் வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்கும் வலுவற்ற பொதுச்சுகாதார கட்டமைப்புக்களைக் கொண்ட நாடுகளுக்கும்்சீனா அதனால் இயன்றவரை பெருமளவு உதவிகளை வழங்குகின்றது.

    விரைவாகப் பரவிவரும் கொரோனாவைரஸுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியாகவே கடந்த வாரம் ஜி -- 20 நாடுகளின் தலைவர்களின்  அதிவிசேடமான மெய்நிகர் உச்சிமகாநாடு(Extraordinary Virtual Leaders' Summit)ஏற்பாடு செய்யப்பட்டது.