கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைப்பதற்கு கண்டி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'கொரோனா வைரஸ் ஒழிப்பு' வேலைத்திட்டம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கண்டி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே வேலுகுமார் எம்.பியால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

" கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்வேளையில் நகரங்களுக்குவந்து பொருட்களை வாங்குவதில் தோட்டப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இன்றி பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும். அதற்காக கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிலையங்கள் வினைத்திறனாக இயங்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கவேண்டும்.

அதேபோல் கூட்டுறவு நிலையங்கள் இல்லாத பகுதிகளில் தற்காலிக நிலையங்கள் திறக்கப்படவேண்டும். ச.தொ.கா. உட்பட பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் ஊடாக மக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறை அவசியம். என வேலுகுமார் எம்.பியால்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட செயலணி, கண்டி கச்சேரி ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.