வாஷிங்கடன், (மார்ச் 28) அமெரிக்கப் பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தின் கீழ் காற்றோட்ட சாதனங்களையும், சுவாசக்கருவிகளையும் தயாரிப்பதற்கு அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன உற்பத்திக் கம்பனியான ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருக்கிறார். 

பாதுகாப்பு உற்பத்திச்சட்டம் என்பது ஒரு போர்க்காலச் சட்டமாகும். கொவிட் - 19 கொரோனா  வைரஸ் பரவரைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தச் சட்டத்தை அவர் தற்போது பயன்படுத்துகிறார்.

'பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தின் கீழிருக்கக்கூடிய எந்தவொரு அதிகாரத்தையும் அல்லது சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி காற்றோட்ட சாதனங்களைத் தயாரிக்குமாறு கிடைக்கும் கோரிக்கைகளை ஏற்று, முன்னுரிமையளித்துச் செயற்படுவதற்கு ஜெனரல் மோட்டர்ஸை இணங்கவைக்க வேண்டுமென அமெரிக்க சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் அமைச்சரைப் பணிக்கும் ஆவணத்தில் நான் இன்று கைச்சாத்திட்டேன்" என்று வெள்ளிக்கிழமை ட்ரம்ப் அறிக்கையொன்றில் கூறினார்.

'காற்றோட்டக் கருவிகளைத் தயாரித்து விநியோகிப்பதில் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்திற்கு இருக்கும் ஆற்றல் தொடர்பில் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவையாக அமைந்திருந்தன. ஆனால் அந்தக் கம்பனி அதன் வழமையான செயற்பாடுகளைத் தொடர்வதைக் காட்டிலும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதற்கான அவசியத்தை வைரஸிற்கு எதிரான எமது போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. 

ஜெனரல் மோட்டர்ஸ் காலத்தை விரயம் செய்துகொண்டிருந்தது. நாம் இன்று எடுத்திருக்கும் நடவடிக்கை அமெரிக்கர்களின் உயிர்களைக் காப்பாற்றக்கூடிய வகையில் துரிதமாகக் காற்றோட்டக் கருவிகளை உற்பத்தி செய்ய உதவும்" என்று ட்ரம்ப் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஜெனரல் மோட்டர்ஸ் விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் அதன் ஊழியர்கள் காற்றோட்டக் கருவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் அவசியத்தேவையைப் பூர்த்திசெய்வதற்குக் கடந்த ஒருமாத காலமாக 24 மணிநேரமும் வேலை செய்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. 

கொரியப்போரின் போது ஏற்பட்ட நெருக்கடியைக் கையாள்வதற்கான ஒரு நடவடிக்கையாக அமெரிக்க காங்கிரஸ் 1950 இல் பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை நிறைவேற்றியது. 

இந்தச் சட்டம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய தளபாடங்கள் தயாரிப்பதை அதிகரிக்குமாறு கம்பனிகளுக்கு உத்தரவிடுதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கிறது.

 முக்கியமானவை என்று கருதப்படுகின்ற விநியோகங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் ஜனாதிபதிக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது. 

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைய ஆரம்பித்த வேளையில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கான நிறைவேற்றதிகார உத்தரவில் மார்ச் 18 ஆம் திகதி ட்ரம்ப் கைச்சாத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.