(இரா.செல்வராஜா)

ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் வேளைகளில் பிரதேச செயலகங்கள் தோறும் தலா ஒரு வங்கிக்கிளைகள் வீதம் திறந்துவைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

ஜனாதிபதி செயலணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான கூட்டமொன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் வணிக வங்கிகளின் தலைவர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெளிநாடுகளிலிருந்து பணப்பரிமாற்றம் செய்வது மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்நோக்கும் நிதிப்பிரச்சினை ஆகியன குறித்து இக்கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.

ஊரங்குச்சட்டம் அமுலில் இருக்கும் வேளைகளில் வங்கிகளைத் திறந்துவைத்தால் அதனைக் காரணம் காட்டி, பொதுமக்கள் வீதிகளில் நடமாடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகப் பாதுகாப்புத் துறையினர் இதன்போது சுட்டிக்காட்டினர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் வங்கிகளைத் திறப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும்.

இதனால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று சுகாதாரத்துறையினரும் கருத்துத் தெரிவித்தனர்.