ஆறு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹாவிலிருந்து, திருகோணமலை நோக்கி வரிசையாகச் சென்று கொண்டிருந்த ஆறு மோட்டார் சைக்கிள்கள்,  திருகோணமலை- ஹொரவபொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் வைத்து இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.

நேற்று திங்கட்கிழமை  இரவு இடம்பெற்ற இவ்விபத்தில், கம்பஹா-கலல்பிடிய பகுதியைச்சேர்ந்த கே.நெவில் சமிந்த (34 வயது), எம்.நிமோத் மதுசங்க (24 வயது) மற்றும் சம்பத் குமார (25 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

பொசன் தினத்தை கொண்டாடும் நோக்கில், கம்பஹாவிலிருந்து, திருகோணமலை நோக்கி 6 மோட்டார் சைக்கிளில் 12 பேர் சென்றதாகவும் வேகமாக வந்துகொண்டிருந்த மோட்டார்  சைக்கிள்கள் பின்புறமாக ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மூவரும், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரில், இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.