(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக மாறிவருகின்ற நிலையில் இலங்கையில் மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சுமார் 300 பேர் கொண்ட ஐந்தாவது குழு இன்று சனிக்கிழமை வீடுகளுக்குச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய தினம் புனாணை, கல்கந்த வவுனியா - பம்பைமடு மற்றும் தியத்தலாவை ஆகிய நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 300 பேர் தமது இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் இத்தாலி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தாய் நாட்டுக்கு திரும்பியவர்கள் என்பதோடு இவர்கள் கொழும்பு , நீர்கொழும்பு , சிலாபம் மற்றும் மாத்தளை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, இவ்வாரத்தில் மாத்திரம் அதாவது கடந்த செவ்வாய்கிழமை முதல் இன்று சனிக்கிழமை வரை சுமார் 1287 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை நிறைவு செய்து வீடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புனாணை மற்றும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 311 பேர் வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர்.

25 ஆம் திகதி 144 பேரும், 26 ஆம் திகதி 223 பேரும், நேற்று 27 ஆம் திகதி 501 பேரும் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். எவ்வாறிருப்பினும் வீடுகளுக்கு திரும்யவர்கள் தொடர்ந்தும் உரிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவதோடு மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.