(நா.தனுஜா)

இவ்வருடத்திற்குப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரை காலஎல்லை வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை மேலும் இருவாரங்களுக்குப் பிற்போடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்திருக்கிறார்.

அதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கு அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் இம்மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னதாக தமது விண்ணப்பப்படிவங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

எனினும் கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு விண்ணப்பபடிவங்களை அனுப்பிவைப்பதற்கான கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

எனினும் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, 2020 ஆம் ஆண்டிற்குப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்காதவாறு, அந்தக் கால எல்லையை மேலும் பிற்போடுவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அடுத்தகட்டத் தீர்மானங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் பதிவேற்றப்படுவதுடன், ஊடகங்களின் வாயிலாகவும் அறிவிக்கப்படும் என்றும் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டிருக்கிறார்.