அநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 175 மாணவர்களுக்கு பெரென்டினா புலமைப்பரிசில்களை அண்மையில் வழங்கியிருந்தது. 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் கணித பாடம் உள்ளடங்கலாக 6 திறமைச் சித்திகளைப் பெற்ற மற்றும் சமுர்த்தி அனுகூலம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது மாதாந்தம் 5000 ரூபாவுக்கு குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 175 மாணவர்களுக்கே பெரென்டினா புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், குறித்த மாணவர்களுக்கு தமது க.பொ.த. உயர்தரக் கற்கைகளை தொடர்வதற்கு அவசியமான நிதி உதவிகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், புகழ்பெற்ற ஆலோசகரான மொஹான் பல்லகுருவின் தொழில் நிலை வழிகாட்டல் ஆலோசனைகளும் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. 

பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கான போதியளவு புள்ளிகளை பெற்றுக் கொள்ளாத மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பெரன்டினாவுடன் பதிவு செய்து கொண்டுள்ள 300க்கும் அதிகமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது. 

கணக்கீடு, தகவல் தொழில்நுட்பம், கடன் முகாமைத்துவம், தாதியியல் போன்ற பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்கு நிபுணத்துவம் வாய்ந்த கற்கைகளுடன் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய புலமைப்பரிசில்கள் தெரிவு செய்யப்பட்ட 30க்கும் அதிகமான கற்கைகளுக்காக வழங்கப்படவுள்ளன. 

2015 ஆம் ஆண்டில் பெரன்டினா வழங்கும் 700 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களில் இந்த 175 மாணவர்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டம், மஹாஜனா கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. 

இந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் வண பிதா. ரஜீவன்  கருத்து தெரிவிக்கையில், 

இந்த உதவிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள், எதிர்காலத்தில் ஏனையோருக்கும் உதவிகளை வழங்க முன்வர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார். 

அறிவார்ந்த மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது உலகில் காணப்படும் மிகச்சிறந்த செயற்பாடுகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தினேஷின் நன்றி உரையுடன் நிறைவடைந்தது.

அநுராதபுரத்தின் 57 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வு அநுராதபுரம், SOS சிறுவர் கிராமம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் விசேட அதிதிகளாக, பேராசிரியர். மத்தும பண்டா, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதில் பீடாதிபதியுமான எமெரிடஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பெரன்டினா குழுமத்தின் தலைவர் துலான் டி சில்வா, அனுராதபுர நகர சபையின் ஆணையர் சம்பத் தர்மதாச, மற்றும் SOS சிறுவர் கிராமத்தின் இடைக்கால பணிப்பாளர் அதுல கமலசிரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். பேராசிரியர் மத்தும பண்டார மற்றும் தர்மசேன ஆகியோர் இரு ஊக்கமளிக்கும் உரைகளை ஆற்றியிருந்ததுடன், பெரன்டினாவின் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் 5000 மாணவர்களின் எதிர்காலத்துக்கு பங்களிப்பு வழங்குவது பற்றிய விளக்கங்களை துலான் டி சில்வா குறிப்பிட்டிருந்தார். 

விசேட விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உள்ளடங்கலாக 280 க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். SOS கிராமம் ஊடாக இந்நிகழ்வில் விசேட கலை நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.