“மனிதகுலம் முழுவதும் ஒரு சமுதாயம் என்பதை இந்த வைரஸ் வெளிக்காட்டி விட்டது"

பெய்ஜிங், மார்ச் 27 (சின்ஹ{வா) கொவிட் - 19 கொரோனா வைரஸை உலகிலுள்ள சகலரதும் எதிரி என்று வர்ணித்திருக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், இந்த ஆட்கொல்லித் தொற்றுநோய்ப் பரவலுக்கு எதிராக முழு அளவிலான தீர்க்கமான உலகலாவிய போருக்கு வியாழக்கிழமை அழைப்புவிடுத்தார். 

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பல்தரப்பு அணுகுமுறையுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான வழிவகைகளை ஆராயப் பிரத்யேகமான வீடியோ மாநாட்டை நடத்தினார்கள். பெய்ஜிங்கில் இருந்த வண்ணம் அந்த வீடியோ உச்சிமாநாட்டிற்கு உரையாற்றிய ஜின்பிங், 'சர்வதேச சமூகம் நம்பிக்கையை வளர்த்து ஐக்கியத்துடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்" என்று குறிப்பிட்டார். 

“கொவிட் - 19 நோய் உலகின் சகலரதும் எதிரி" என்று கூறிய சீன ஜனாதிபதி, கொவிட் வைரஸிற்கு எதிரான போரில் மனிதகுலம் முழுவதும் ஒன்றிணைந்து செயற்பட்டு வெற்றிகொள்வதற்காக சர்வதேச சமூகம் விரிவான சர்வதேச ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்டும் என்றும், மனிதகுலம் கவலையையும், மகிழ்ச்சியையும் பகிரும் பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகம் என்பதை இந்நோய் மீண்டுமொரு முறை வெளிக்காட்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். 

கொவிட் - 19 கொரோனா வைரஸிற்கு உலகளாவிய ரீதியில் மரணித்தோர் எண்ணிக்கை 24,000 ஐத் தாண்டியிருப்பதுடன், தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 550,000 ஐ எட்டும் ஆபத்தான நிலைமை தோன்றியிருப்பதுடன் உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தலைவர்கள் இந்த வீடியோ மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். 

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட 20 நாடுகளின் நிதியமைச்சர்களும், மத்திய வங்கித் தலைவர்களும் பொருளாதார ஒத்துழைப்புக் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு நாளடைவில், குறிப்பாக 2008 இல் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பிற்கான பிரதான உலக அரசாங்கத் தரமுயர்த்தப்பட்ட பிறகு அதன் தலைவர்கள் இப்போது தான் முதற்தடவையாக இணையவெளியிலான உச்சிமாநாடொன்றை நடத்தியிருக்கிறார்கள். 

உலகலாவிய ரீதியில் வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டு வருவதாகவும், நிலவரம் இன்னும் குழப்பத்தைத் தருவதாக இருப்பதாகக் கூறிய சீன ஜனாதிபதி, வைரஸ் பரவலைத் தடுக்கத் துரிதமாக செயற்படுமாறு நாடுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். 

சுகாதார அமைச்சர்களின் மாநாடு

தகவல் பகிர்வை மேம்படுத்தவும், மருந்து வகைகள் தொடர்பான ஒத்துழைப்பைப் பலப்படுத்தவும், எல்லைகளைக் கடந்து வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் சாத்தியமானளவு விரைவாக ஜி-20 நாடுகள் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டவேண்டும் என்று சி ஜின்பிங் யோசனை முன்வைத்தார். 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் சிறந்த முறையில் தகவல் பரிமாற்றம், கொள்கை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான கொவிட் - 19 உதவி செயற்திட்டமொன்றை ஜி-20 நாடுகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். மனிதகுலத்திற்கான பொதுவானதொரு எதிர்காலத்துடனான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கினால் வழிநடத்தப்படுகின்ற சீனா, வைரஸின் பரவல் கடுமையாக அதிகரித்திருக்கும் நாடுகளுக்கு அதன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், உதவிகளை வழங்கவும், முன்னரையும் விடக்கூடுதலாகத் தயாரான நிலையிலிருக்கிறது என்றும் சீனத்தலைவர் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ மாநாடு சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல்-சவுத் தலைமையில் நடைபெற்றது. ஜி-20 நாடுகளின் இவ்வருடத் தலைமைத்துவத்தை வகிக்கும் சவுதி இராச்சியம் கொவிட் - 19 தொற்றுநோயையும், அதன் விளைவான பொருளாதாரத் தாக்கங்களையும் கையாள்வதற்கான உலகளாவிய முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்த அதிவிசேட வீடியோ மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறியது. 

இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் ஸ்பெயின், ஜோர்தான், சிங்கப்பூர் மற்றும் சுவிட்ஸர்லாந்து உட்பட விசேடமாக அழைக்கப்பட்ட சில நாடுகளின் தலைவர்களும் ஐக்கிய நாடுகள்சபை, உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்கள், சில நாடுகளுக்கு இடையிலான பிராந்திய அமைப்புக்களுக்குத் தலைமை தாங்கும் அரசுகளின் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

கொவிட் - 19 தகவல் நிலையம்

வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளையும், சிகிச்சைகளையும் சர்வதேச மட்டத்தில் செய்வதற்கான கூட்டுப்பிரதிபலிப்பை நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் என்று தனது உரையில் அழைப்புவிடுத்த ஜின்பிங் தனது நாடு சகலநாடுகளுக்கும் சுலபமாக அணுகக்கூடிய கொவிட் - 19 தகவல் நிலையத்தை இணையவழி மூலம் ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கூறினார்.

வீடியோ மாநாட்டில் கலந்துகொண்ட ஏனைய நாடுகளினதும், அமைப்புக்களினதும் தலைவர்கள் கொரோனா வைரஸின் விரைவான பரவல் சர்வதேச ரீதியில் பொதுச்சுகாதாரப் பாதுகாப்பிற்குக் கடும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பது மாத்திரமல்ல. மாறாக உலகின் அரசியல், பொருளாதாரம், நிதி உள்ளிட்டவற்றின் மீதும் புதியதொரு இருளைப் பரப்பியிருப்பதை ஏற்றுக்கொண்டார்கள். மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான நெருக்கடியொன்று தோன்றியிருக்கும் நிலையில் வைரஸ் பரவுவதிலிருந்து எந்தவொரு நாடும் விலகியிருக்க முடியாது என்று கூறிய தலைவர்கள் முன்னெப்போதையும் விடத் துரிதமானதும், ஒன்றிணைந்ததுமான முயற்சிகளுக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அழைப்புவிடுத்தனர். 

உலகப்பொருளாதாரத்திற்கு 5 ட்ரில்லியன் ஊக்குவிப்பு

இதேவேளை கொவிட் - 19 இனால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பொதுவான அச்சுறுத்தலுக்கு எதிராக ஐக்கிய முன்னணியொன்றை ஏற்படுத்துவதற்குச் சூளுரைத்த ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உலகலாவிய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு 5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை ஊக்குவிப்பாக வழங்குவதற்கு உறுதியளித்திருக்கின்றனர். 

வீடியோ மாநாட்டின் இறுதியில் அந்தத் தலைவர்களால் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் இந்த உறுதி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.