இந்திய கிரிக்கெட் விரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. உலக அளவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். 750 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை இந்திய மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீர சச்சின் டெண்டுல்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ வெளியிட்டார். அதில், “ மக்களிடம் இருகரம் கூப்பிக் கேட்கிறேன், தயவுசெய்து வீட்டை விட்டு வெளிேய செல்ல வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்திய மதிப்பில் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 இலட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் அளித்த நன்கொடைதான் இதுவரை மிக அதிகமாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் பொலிஸார் , சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முகக் கவசங்களை வழங்கியுள்ளனர்.

தோனி மூலம் புனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.ஒரு இலட்சம் வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி மேற்கு வங்கத்தில் கொரோனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.