சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கடவுச்சீட்டு மற்றும் குடியிருப்பு அனுமதி இருந்தாலும், அவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா வெளிநாட்டு விமான நிறுவனங்களின்  சேவையை வாரத்திற்கு ஒரு விமான சேவையாக மட்டுப்படுத்துகிறது.

சீனாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அனைவரும் இப்போது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த 3 நாள்களின் பின்  முதல் உள்ளூர் கொரோனா தொற்று சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம்  வியாழக்கிழமை சீனா முழுவதும் 55 புதிய நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றில் 54 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களாவர்.

சீன வெளியுறவு அமைச்சகம் "கொவிட்-19 உலகம் முழுவதும் வேகமாக பரவுவதால்" "வெளிநாட்டினரின் நுழைவை நிறுத்தி வைப்பதாக" கூறியுள்ளது. 

இந்த கொரோனா வைரஸ் சீனாவில் முதலில் தோன்றினாலும், இப்போது அது அமெரிக்காவை விட குறைவான நோய் தொற்றாளர்களையும், இத்தாலி மற்றும் ஸ்பெயினை விட குறைவான இறப்புகளையும் கொண்டுள்ளது.

சீனாவில் 81,340 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு , 3,292 பேர் இறந்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றிய ஹூபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை புதிய உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட நோய் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.