(நா.தனுஜா)
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, இவ்வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குச் செலுத்த வேண்டிய பெறுமதி சேர் வரியைச் செலுத்துவதற்கான கால எல்லையை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்திருக்கிறது.

இதுகுறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் கூறியிருப்பதாவது,
ஜனாதிபதி அலுவலகத்தினால் கடந்த 23 ஆம் திகதி விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் வரி அறிவீடு தொடர்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி இவ்வருடம் பெப்ரவரி மாதத்திற்காக மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டியதும், மார்ச் மாதத்திற்காக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டியதுமான பெறுமதி சேர் வரியைச் செலுத்துவதற்கான கால எல்லை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்குறிப்பட்ட கால எல்லைக்கு அமைவாக ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்தப்படும் கட்டணம் உரிய தினத்தில் செலுத்தப்பட்டவையாகக் கருதப்படுவதுடன், வழமையாக குறிக்கப்பட்ட கால எல்லை கடந்த பின்னர் செலுத்தப்படும் கட்டணத்திற்கு அறவிடப்படும் தண்டப்பணம் நீக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக நாட்டின் தற்போதைய நிலைகுறித்து ஆராய்ந்ததன் பின்னர் பெறுமதி சேர் வரி செலுத்துவதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வரி விபரங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.