பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒன்பது மருதத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் மருத்துவர்கள் அமைப்பு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும்,மருத்துவர்களிற்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார்,இவருடன் சேர்த்து ஒன்பது மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்  என தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் மருத்துவ சங்கம் சுகாதார பணியாளர்களிற்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

முன்னரங்கில் நின்று செயற்படுகின்ற மருத்துவர்களை முதலில் பரிசோதனை செய்யுங்கள் ஏழு நாட்களிற்கு பின்னர் மீண்டும் அவர்களை பரிசோதனை செய்யுங்கள் அவர்களால் நோய் பரவக்கூடும் என பிலிப்பைன்ஸ் மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தலைநகர் மனிலாவை சேர்ந்த மூன்று முக்கிய மருத்துவமனைகள் தங்கள் அளவிற்கு அதிகமாக நோயாளிகளை உள்வாங்கியுள்ளதாகவும் புதிய நோயாளிகளிற்கு அனுமதியளிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளன.

நோய்தொற்றிற்கு ஆளாகியிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக தங்களை தனிமைப்படுத்தியுள்ள பிலிப்பைன்சின் மருத்துவ பணியாளர்கள் புதிய நோயாளிகளை ஏற்க மறுத்துவருகின்றனர் பிலிப்பைன்சில் வைரஸ் காரணமாக38 பேர் உயிரிழந்துள்ளனர்.