(எம்.மனோசித்ரா)

மலையகத்தில் பிரதான தொழிற்சங்கங்கள் தாமாகவே முன்வந்து சந்தாப்பணம் அறவிடுவதை இடைநிறுத்தியுள்ளன.

கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக்கருத்திற்  கொண்டு மார்ச் மாதத்துக்கான சந்தாக் கட்டணத்தை அறவிடுவதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதே போன்று  இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் , தொழிலாளர் தேசிய சங்கம்  மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியனவும் இதே தீர்மானத்தை எடுத்துள்ளன.

இது தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளதாவது :

மாதாந்த சந்தா விடயத்தில் ஏற்கனவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டி தலைவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சில தோட்டக்கமிட்டி தலைவர்கள் தங்களது தோட்ட முகாமையுடன் கதைத்து சந்தாவை நிறுத்தி உள்ளனர். 

எல்லா தோட்டங்களிலும் இந்த நடைமுறை தொடரும். மறு அறிவித்தல் வரும்வரை சந்தா பணம் அறவிடப்படாது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்தும் தெளிவுடன் செயற்பட வேண்டும். தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளத் தேவையான நடைமுறைகளை கையாள வேண்டும்.