(எம்.எப்.எம்.பஸீர்)
வடமாகாணத்தின் முல்லைதீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த 5 மாவட்டங்களுக்கும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீள ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் அது எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கள் வரை தொடரும் எனவும்  பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.எனினும் வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் தற்போது அமுலில் உள்ள  ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக நேற்று பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை நீடித்ததாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அதன்படி யாழ். மாவட்டத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும்  ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை தொடரும் என பொலிஸ் தலைமையகம் நேற்று விஷேட அறிக்கை ஒன்றினை விடுத்து அறிவித்தது.

 இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்கள் தொடர்பிலும் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 30 ஆம் திகதி திங்களன்று காலை 6.00 மணிக்கு மீள தளர்த்தப்படவுள்ளது. பின்னர் அன்றைய தினமே அந்த 21 மாவட்டங்களுக்கும் பிற்பகல் 2.00 மனிக்கு மீள ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

எவ்வாறாயினும் ஊரடங்கு காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய சேவைகளுக்கு எந்த தடங்கல்களும் ஏற்படமாட்டாது எனவும்,  அத்தியாவசிய சேவைகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எந்த தடையும் இன்றி  அவற்றை முன்னெடுக்க முடியும் எனவும் பொலிஸார் கூறினர்.