(ஆர்.யசி)

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த 18, 093 சுற்றுலாப்பயணிகள் தமது மீள் பயணத்தை உறுதிசெய்து நாட்டினை விட்டு வெளியேற எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த காலங்களில் சுற்றுலா நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்து தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது 18 ஆயிரத்து 93 வெளிநாட்டு பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு வாரமாக இலங்கை அரசாங்கம் நாட்டுக்கான விமான சேவைகளை தடை செய்துள்ள நிலையில் வெளிநாட்டு பயணிகள் மீண்டும் அவர்களின் பயணங்களை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனினும் நாட்டில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பிவைக்க வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரசபை அதிகாரிகள் கூறுகின்றனர். 

குறிப்பாக கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையில் உள்ள வெளிநாட்டவர் மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்ததில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினூடாக பயணிகள் வெளியேற மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. 

அதேபோல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலதிலும் கூட நாட்டினை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு முழு அனுமது வழங்கப்பட்டுள்ளது. 

பயணிகள் தமது பயண அனுமதி பத்திரங்களை காண்பித்து நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தேனும் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பையும் அரசாங்கம் விடுத்திருந்தது. 

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள பயணிகள் இலங்கையில் எங்கு பயணம் செய்திருந்தாலும் அவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு செல்வதற்கு சிரமங்களை சந்திப்பார்கலாயின் அவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் இலங்கை சுற்றுலாத்துறை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இருபத்து நான்கு மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வித்தல் 117 என்ற இலக்கத்தையும் 1912 என்ற இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.