உலகில் இன்று வரையில் கொவிட் - 19 (கொரோனா வைரஸ்) தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 490,253 ஐயும் தாண்டிவிட்டதாகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,156 இற்கும் அதிகம் என்றும்· அமெரிக்காவில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், கொவிட் - 19 களநிலவரத்தைக் கண்காணித்துவரும் அமெரிக்காவின் ஜோன்ஸ் கொகின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட பிந்திய தரவுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

சீனப்பெருநிலப்பரப்பிலும், ஹொங்கொங்கிலும் வைரஸ் தொற்றுக்குப் புதிதாக இலக்கானவர்களின் எண்ணிக்கையில் ஒரு அதிகரிப்பு இருப்பதாகத் தெரிவித்த சீன சுகாதார அதிகாரிகள், இவர்களனைவரும் வெளிநாடுகளிலிருந்து சீனாவிற்கு வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

புதிதாக 67 பேருக்கு நேற்றுத் தொற்று ஏற்பட்டது. ஆனால் அவர்களில் எவரும் உள்நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்கள் அல்ல. 

அதேவேளை கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய வூஹான் நகரில் அகப்பட்டிருந்த 800 பெய்ஜிங்வாசிகள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டனர். சீனாவிற்குள் பயணக்கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை இது காட்டுகிறது.

இதேவேளை ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் புதிய அலை காரணமாக இவ்வார இறுதியில் நகரவாசிகளை வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாமென ஆளுநர் அறிவுறுத்தியிருக்கிறார். 

டோக்கியோவில் புதன்கிழமை 41 பேருக்குப் புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது இந்த நகரில் ஒரு தினத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் ஏற்பட்ட தொற்றாக இருக்கிறது.

இது இவ்வாறிருக்க கொவிட் - 19 பரவலின் விளைவாக ஏற்படுகின்ற பொருளாதாரப் பாதிப்பைத் தணிப்பதற்கான 2 ட்ரில்லியன் டொலர்கள் ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை அமெரிக்க செனட் புதன்கிழமை இரவு நிறைவேற்றியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக அமெரிக்கக் காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபையில் அங்கீகரிக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது.

கொவிட் - 19 வைரஸிற்கு அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை நேற்றைய தினம் ஆயிரத்தைத் தாண்டிய அதேவேளை, தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை சுமார் 70,000 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத்தை இன்னும் 3 வாரங்களில் மீண்டும் திறக்க விரும்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை எளவைத்திருக்கிறது. 

அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுவ்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை மலிவீனப்படுத்திவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 12 ஆம் திகதி வருகின்ற உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னதாக அமெரிக்கப் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவைக்க விரும்புவதாகக் கடந்த செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஊடகங்களைச் சாடும் ட்ரம்ப் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத்

தெரிவாவதற்குத் தனக்கிருக்கக்கூடிய வாய்ப்புக்களுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் முகமாக அமெரிக்கப் பொருளாதாரத்தை மூடிவைத்திருக்க ஊடகங்கள் விரும்புகின்றன என்று அமெரிக்க ஜனாதிபதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

 வெள்ளை மாளிகையில் தினசரி நடத்தும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் சில பகுதிகளை மாத்திரம் திறப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பலவீனமாக வைத்திருக்க முயற்சிப்பதாக நிருபர்களை அவர் அச்சந்தர்ப்பத்தில் குற்றஞ்சாட்டினார்.

ஸ்பெயின் நிலவரம்

சீனாவிற்கும், இத்தாலிக்கும் அடுத்ததாக கொரோனா வைரஸினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடான ஸ்பெயின், அதன் வரலாற்றிலேயே மிகவும் இருண்டதொரு காலகட்டத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. 

இதுவரையில் ஸ்பெயினில் வைரஸிற்குப் பலியானோர் எண்ணிக்கை 3,647 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவில் பலியானோர் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இதனிடையே மோசமடைந்துவரும் உலகப்பொருளாதார நிலவரம் குறித்து ஆராய ஜி-20 நாடுகளின் தலைவர்கள் நேற்று வியாழக்கிழமை வீடியோ மாநாடொன்றை நடத்துவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

சீனாவின் ஒத்துழைப்பு

இதேவேளை கொவிட் - 19 வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் ஏனைய சகல தரப்பினருடனும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு, சர்வதேச சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சீனா தயாராக இருக்கிறது என்று அந்நாட்டு ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஜி-20 நாடுகளின் மாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மன் அதிபர் அஞ்சலா மர்கலுடன் தொலைபேசியில் உரையாடிய சீன ஜனாதிபதி கொவிட் - 19 வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும், அதனால் பீடிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதிலும் சீனாவிற்கு இருக்கும் அனுபவத்தை ஜேர்மனியுடனும், ஏனைய உலக நாடுகளுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றது என்று கூறியதாக உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா நேற்று அறிவித்தது.

இதுவரையில் கொரோனா வைரஸ் உலகின் 196 நாடுகளையும், பிராந்தியங்களையும் பாதித்திருக்கிறது. மிகவும் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட நாடுகளாக சீனாவிற்கு அடுத்ததாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஜேர்மனி, ஈரான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

(த கார்டியன், சின்ஹுவா)