(நா.தனுஜா)

இந்நூற்றாண்டின் மிக மோசமான தொற்றுநோயாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இப்போது உலகத்தலைவர்கள் அனைவரும் சகல வேறுபாடுகளையும் களைந்து ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்திருக்கிறார்.

தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையில் உலகத்தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக முன்னாள் சபாநாயகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று வியாழக்கிழமை பதிவொன்றைச் செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

'கடந்த ஒரு நூற்றாண்டு காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த கொவிட் - 19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் பரவல் மிகவும் மோசமானதொரு தொற்றுநோயாக மாறியிருக்கிறது. எந்தவொரு தேசிய, சர்வதேச சமூக மற்றும் பொருளாதார எல்லைகளையும் வாய்ப்புக்களையும் பொருட்படுத்தாமல் இந்த வைரஸின் கொடூரமான பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் உலகத்தலைவர்களின் வழிகாட்டியாக இரக்கமும், மனிதாபிமானமும் இருக்கவேண்டும். அனைத்து விதமான போர்களையும் நிறுத்துங்கள், அனைத்து தடைகளையும் கட்டுப்பாடுகளையும் தளர்த்துக்கள். இப்போது அனைவரும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துங்கள். ஏற்கனவே புத்தபெருமான் கூறியது போன்று ஒருபோதும் வெறுப்பை வெறுப்பால் இல்லாமல் செய்யமுடியாது. மாறாக அன்பாலும், இரக்கத்தினாலும் அதனை இல்லாமல் செய்யமுடியும். இப்போது மனிதாபிமானத்தை நிலைநாட்டுவதற்காக நீங்கள் செய்பவற்றை எதிர்காலம் வாழ்த்தக்கூடியவாறாக உங்களது செயற்பாடுகள் அமையவேண்டும்' என்றும் அவர் உலகத்தலைவர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.