(நா.தனுஜா)

இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீண்டும் அவர்களது நாடுகளுக்குச் செல்ல விரும்பும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் சுற்றுலாப்பயணிகள் 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தம்மைத் தொடர்புகொண்டு பேசமுடியும் என்றும் இலங்கைச் சுற்றுலாச்சபை அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து சுற்றுலாச்சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மிக்க சூழ்நிலையில், நேற்று  புதன்கிழமை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி கிட்டத்தட்ட 18,093 வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் நாட்டில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக நாம் வெளிவிவகார அமைச்சுடனும் உரிய தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் நாட்டிற்குள் தரையிறங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்வது நிறுத்தப்படவில்லை. அதேபோன்று தினமும் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிற்றா ஆகியவற்றுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

வெளிநாட்டவர்கள் எவரேனும் சுற்றுலாப்பயணம் அல்லது வேறு வேலைகளின் நிமித்தம் இலங்கைக்கு வருகைதந்து இங்கு தங்கியிருப்பார்களெனின் அவர்கள் மீண்டும் தமது நாட்டிற்குத் திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலாப்பயணத்துறை சார்ந்த தொழிற்துறையில் ஈடுபடுபவர்கள், தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையில் இங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாட்டிற்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு விமானநிலையம் வரையிலான போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாடளாவிய ரீதியில் ஊரங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில், விமான டிக்கெட்டை ஊரடங்கின் போது பயணிப்பதற்கான அனுமதியாகப் பயன்படுத்த முடியும் என்று பதில் பொலிஸ்மாதிபர் தெரிவித்திருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

விமானநிலையம் வரையிலான போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் சுற்றுலாப்பயணிகள், உங்களுக்கு அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்தையோ அல்லது 1912 என்ற அவசர இலக்கத்தினூடாக எம்மையோ தொடர்புகொள்ள முடியும்.