(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 3138 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து 782 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் அதனை மீறும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும், சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு செயற்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்ற நிலையிலும் இன்று வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான 6 மணித்தியாலயத்திற்குள் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 6 நாட்களுக்குள் மாத்திரம் 3138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கார், முச்சக்கர வண்டி உள்ளிட்ட 782 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.