(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து உலகின் வறிய மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்குக் கடனுதவிகளை வழங்கியவர்கள் அக் கடன்களை மீள அறவிடுவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமென்று உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் ஒருமித்துக் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

உலகின் வறியநாடுகள் கொரோனா வைரஸ் பரவலுடன் எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றன. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வறிய மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது. உலகின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மிகவும் வறிய நிலையிலேயே உள்ளனர்.

எனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்துஇ இத்தகைய வறிய மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்குக் கடனுதவிகளை வழங்கியவர்கள் அக்கடன்களை மீள அறவிடுவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமென்று உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் ஒருமித்துக் கேட்டுக்கொள்கின்றது. 

அதனூடாக அந்நாடுகள் இப்போது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும் என்பதுடன் இதனாலேற்பட்ட நிதியிழப்பு குறித்த மதிப்பீட்டைச் செய்வதற்கும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

மிகுந்த நிதி மற்றும் கடன் நெருக்கடியில் உள்ள அபிவிருத்தியடைந்துவருகின்ற மற்றும் வறிய நாடுகளை அடையாளங்காண்பதற்கும் தற்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நிதியிழப்பு தொடர்பான மதிப்பீட்டைச் செய்வதற்கும் எமக்கு உதவுமாறு ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

இத்தகைய தருணத்தில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு இவ்வாறானதொரு நிவாரணத்தை வழங்குவது அவசியம் என்று நாம் கருதுவதுடன் இதனூடாக நிதிச்சந்தைக்கும் வலுவான சமிக்ஞையொன்றை வழங்கமுடியும் என்று நம்புகின்றோம்.