(இராஐதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்காக நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் பொதுமக்கள் அத்தியாவசிய  மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் எவ்வித தடைகளும் ஏற்படாத விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவும் இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்யவும், தேசிய மட்டத்தில் தயாரிக்கப்படும் மருத்துகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒழிப்பு ஜனாதிபதி செயலனி குழு தலைவர், முன்னாள் அமைச்சர்  பசில் ராஜபக்ச மற்றும் தேசிய மருத்து உற்பத்தியாளர்களுக்கு இடையிலான  சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது மக்கள் அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்ளதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொள்ளதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேசிய மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தற்போதைய தேவைக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் தற்போது நெருக்கடி காணப்படுவதாக மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்தார்கள் .

இந்திய சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரையாடிய பின்னர் இறக்குமதிகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெறுபவர்களுக்கும் முழுமையான சேவை வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.