(நா.தனுஜா)

மக்களின் நடமாட்டத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி, தமது நகரங்களை மூடியிருக்கும் அனைத்து நாடுகளும் இத்தருணத்தை வைரஸை தாக்கி, தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்றோஸ் அதானொம் கேப்றியேஸிஸ் அறிவுறுத்தியிருக்கிறார்.

அதற்கான ஆறு பிரதான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தல் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இது உலகின் பல பாகங்களிலும் சுகாதார ரீதியில் மாத்திரமன்றி மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இவ்வருடம் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பிற்போடுவது என்ற கடினமானதும் அதேவேளை தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானதுமான தீர்மானத்தை ஜப்பான் அரசாங்கமும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் மேற்கொண்டிருக்கிறது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் நலனைப் பாதுகாப்பதை முன்நிறுத்தி இத்தீர்மானத்தை மேற்கொண்ட ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்போட்டிகளை எதிர்வரும் வருடம் அனைவரும் இணைந்து மேலும் கோலாகலமாக நடத்தமுடியும் என்றும் நம்புகின்றேன்.

கடந்த காலங்களில் இதுபோன்ற மோசமான தொற்றுநோய்களிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கின்றோம். அதேபோன்று இதிலிருந்தும் எம்மால் மீளமுடியும். ஆனால் அதற்கு எத்தனை பெரிய விலையைச் செலுத்தப் போகின்றோம் என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.

ஏற்கனவே நாம் 16,000 இற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்துவிட்டோம். இன்னமும் பலி உயிர்களை இழப்போம் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதன் எண்ணிக்கை என்னவென்பது தற்போது நாம் மேற்கொள்ளும் தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலுமே தங்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகள் முன்மாதிரியான, குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு, விளையாட்டுப்போட்டிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், மக்களனைவரும் தத்தமது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். குறித்த நாடுகள் இந்த உத்தரவுகளை எப்போது, எவ்வாறு தளர்த்துவது என்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.

மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கோருவதும், அதனூடாக மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதும் உரிய மருத்துவ மற்றும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான இலகுவான சூழலை உருவாக்கும். ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு நோய் பரவுவதைத் தடுப்பதும், உயிர்களைப் பாதுகாப்பதுமே இந்நடவடிக்கைகளின் பிரதான நோக்கமாகும். எனவே மக்களின் நடமாட்டம் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, தமது நகரங்களை மூடியிருக்கும் அனைத்து நாடுகளும் வைரஸை தாக்குவதற்கு இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால் இத்தருணத்தை அதற்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதே தற்போது இருக்கின்ற கேள்வியாகும். அதற்கு மிகமுக்கியமாக 6 நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் பரிந்துரைக்கின்றோம்.

அவையாவன:

முதலாவதாக அனைத்து நாடுகளும் தத்தமது நாடுகளின் சுகாதார மற்றும் பொதுச்சுகாதார சேவையாளர்களை விரிவாக்குவதுடன், அவர்களுக்குரிய பயிற்சியை வழங்கவேண்டும்.

இரண்டாவதாக சமூகத்திற்குள் இருக்கும் வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளிகளையும் கண்டறிவதற்கான உரிய செயன்முறையொன்றை உருவாக்க வேண்டும்.

மூன்றாவதாக நோயாளிகளைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடைமுறைகளை விரிவாக்கவேண்டும்.

நான்காவதாக அடையாளங்காணப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஐந்தாவதாக நபர்களைத் தனிமைப்படுத்துவதற்கான முறையான திட்டத்தை உருவாக்குவதுடன்

ஆறாவதாக கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி, அடக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.