(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் அவசரகால நிலையிலும் பாராளுமன்றத்தைக் கூட்ட எந்த தீர்மானம் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போதுவரையில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சுகாதார வேலைத்திட்டங்கள் போதுமானதாக இருப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இறுதியாக கூடிய சர்வகட்சி கூட்டத்தில் அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அரசியல் பாகுபாடு இல்லாது அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எடுக்கும் அளவிற்கு அரசாங்கம் பலவீனமாக செயற்படவில்லை.

இந்த தேசிய அனர்த்த நிலைமைகளை அரசாங்கம் மிகச் சரியாக கையாண்டு வருகின்றது. எனவே தொடர்ந்தும் அதே வேலைத்திட்டங்கள் சரியாக முன்னெடுக்கப்படும்.

அதேபோல் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினரை இணைத்துக்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உலகளவில் அனர்த்த நிலையாக மாறியுள்ள வேளையில் இதிலிருந்து மீளும் வேலைத்திட்டத்தில் சகல தரப்பையும் இணைத்துக்கொண்டு அவர்களின் கருத்துக் காரணிகளை கேட்டு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவதில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைவரும் இணைந்து செயற்பட முடியும் என்றார்.