(ஆர்.யசி)

தவணை கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முச்சக்கரவண்டி, வான், பேருந்து மற்றும் ஏனைய டக்சி கார்கள் என்பவற்றுக்கான மாதாந்த தவணைக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில் இப்போதுள்ள நெருக்கடிகால சூழலில் ஆறுமாத காலத்திற்கு அதற்கான தவனைக் கட்டணங்களை அறவிட வேண்டாம் என்ற தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றவேளையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

நாளாந்த வாழ்கையை கொண்டு நடத்தும் மக்கள் தவணைக் கடன் அடிப்படையில் முச்சக்கரவண்டி, வான், பேருந்து மற்றும் ஏனைய டக்சி கார்கள் உள்ளிட்ட வாகனங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவர்களின் நாளாந்த வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே உருவாகியுள்ளது.

பாடசாலைகள் விடுமுறை காரணமாக பேருந்துகள் வான்கள் ஓடாத நிலைமை உள்ளது. அதேபோல் முச்சக்கரவண்டி வைத்திருக்கும் நபர்களுக்கும் நாளாந்த வருமானம் இல்லாது போயுள்ளது. ஆகவே அவர்களின் இந்த நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு அடுத்த ஆறுமாத காலத்திற்கு இவர்களுக்கான தவணைக் கட்டணம் மற்றும் வட்டி அறவிடக்கூடாது என்ற அறிவித்தல் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தலுக்கு அமைச்சரின் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 24 ஆம் திகதியில் இருந்து இது அடுத்த ஆறுமாத காலத்திற்கு இந்த கடன்களை அறவிட வேண்டாம் என்ற அறிவித்தல் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சுவாசிக்கவே முடியாத நெருக்கடியில் இருக்கும் வேளையில் அவர்களை கடன் சுமையில் நெருக்கக் கூடாது என்தைது கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. லீசிங் முறையில் கடன்கள் எடுக்கப்பட்டுள்ள சகல வங்கிகள், நிறுவனங்கள் அனைத்திற்கும் இது அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அதேபோல் 10 இலட்சத்திற்கும் குறைந்த தனிநபர் கடன்களுக்கான அறவீடுகளும்  மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முறையான வங்கி செயற்பாடுகளின் மூலமாக கடன்களை பெற்றவர்கள் மட்டுமே இதற்கும் உள்ளடக்கப்படுவர். தனி நபர்களின் மூலம் சட்ட முறைக்கு முரணாக பெறப்பட்ட கடன்கள் இதில் உள்ளடக்கப்படாது. கடன் அட்டைகளில் 50 ஆயிரத்துக்கும் குறைந்த பணம் பெற்றவர்களுக்கு 15 வீத வட்டி குறைப்பு செய்யப்படவுள்ளது. அதேபோல் கடன்கள் 50 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.