தென்கொரியா கொரோனா வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த தனது நாட்டுக்குள் வரும் பயணிகளை கண்காணிக்க புதிய வழிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், தென்கொரியாவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து செல்லும் பயணிகள் சுய தனிமைப்படுத்தப்படுத்தல் செயலியை (self-quarantine app) கட்டாயம் பதிவிறக்க வேண்டும் என அந்நாட்டின் அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த செயலி தென்கொரிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தப்படுத்தல் செயலி ஒவ்வொரு நாளும் பயணிகள் தங்கள் கொரோனா வைரஸ்  தொற்று அறிகுறிகளை சரிபார்க்க நினைவூட்டுகிறது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா? இல்லையா  என்பதை உறுதிப்படுத்த அவர்களின் இருப்பிடத்தை கண்காணிக்கிறது.

சரியான காரணமின்றி தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் உடனடியாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டு, அவர்கள் வெளிநாட்டு குடிமக்களாக இருந்தால் நாடு கடத்தப்படுவார்கள்.

ஒரு நபர் அங்கீகாரமின்றி தாங்கள் தனிமைப்படுத்தலை விட்டு வெளியேறும்போது காவல்துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்துவார்கள்.

தென்கொரியாவில் தனிமைப்படுத்தலை மீறினால் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது  10 மில்லியன் வொன் (8,150 டொலர்) அபராதமும் விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது

தென்கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ்  தொற்றினால் 9,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 131 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.