(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை,   வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் புத்தளம் மாவட்டத்தையும்  தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றது. இவ்வாறு தளர்த்தப்படும்  ஊரடங்கானது அந்த 16 மாவட்டங்களிலும் இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல் செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரம் குறித்து நேற்று மாலை வரை தீர்மானிக்கப்படாத நிலையில், புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நாளை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. குறித்த ஆறு மாவட்டங்களிலும் நாளை தளர்த்தப்படும் குறித்த ஊரடங்கு மீள நண்பகல் 12 மணிக்கு மீள அமுல் செய்யப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் வீடுகளில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு ஏதேனும் பொதுவான பிரச்சினை எழுமாயின் அது குறித்து அறிவிப்பதற்காக பொலிஸார் தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி  பொலிஸ் அவசர அழைப்பு பிரிவின் 119 மற்றும் 0112 44 44 80, 0112 44 44 81 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மக்கள் அவசர பிரச்சினைகள் குறித்து அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவின் பனிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜலைய சேனாரத்ன கூறினார்.
மக்களுக்கு எழுகின்ற சுகாதாரப் பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு, நீர் விநியோக துண்டிப்பு உள்ளிட்ட பொது பிரச்சினைகள் தொடர்பில் இந்த இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதக அவர் கூறினார்.

மக்களிடமிருந்து அவ்வாறு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளர்.