மட்டு மாவட்டத்தில் கொரோனாவினால் ஆயிரத்து 37 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இன்று புதன்கிழமை(25,03,202) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.இதன்போது மாவட்டத்தில் வீடுகளில் 172 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் வெளிமாவட்டங்களில் பணியாற்றிவிட்டு மட்டக்களப்புக்கு வந்த 865 குடும்பங்கள் உட்பட 1037 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பிராந்திய சுகாதாரப் பணிமனையினர் மற்றும் பொலிசாரினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இதில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 225 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுெவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இரானுவத்தின் 23வது படைப்பரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயசுந்தர, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். அச்சுதன், பொலிஸ் மற்றும் செயலணியின் உறுப்பினர்களான வைத்திய நிபுணர்கள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.