மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் தெரணியகல மாலிபொட தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரிவுகளில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கு 12 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக மன்றத்தின் உபதலைவர் ஏ.எஸ். ஞானம் தெரிவித்தார்.

தொலைக் காட்சியொன்று அண்மையில் தெரணியகல தோட்ட மக்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டத்துக்கு ஆளாகி, வறுமையில் வாடுவது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது.

இதை அறிந்த மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் “எம்மவருக்கு உதவுவோம்” திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை பொதி செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலையில் மேற்படி பொதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. “கொரோனா” வைரஸ் தொற்று தொடர்பாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுலில் உள்ள காரணத்தால் தெரணியகல பொலிஸ் நிலையம் மற்றும் அங்குள்ள மருத்துவ உத்தியோகத்தர் முதலானோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.